தீவிரவாதத்தை எதிர்ப்பதில் உலமாக்களுக்கு முக்கிய பங்கு; அஜித் தோவல் வலியுறுத்தல்

புதுடெல்லி: தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதில் உலமாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்தார். இந்தோனேசியாவின் அரசியல், சட்டம், பாதுகாப்பு விவகாரங்களுக்கான  அமைச்சர் முகமது மஹ்புத் தலைமையில் உலமாக்கள், பிற  மதங்களின் பிரதிநிதிகள் குழு ஒன்று டெல்லி வந்துள்ளனர். இங்குள்ள இந்திய  இஸ்லாமிய கலாச்சார மையத்தில் பல்வேறு தலைப்புகளில் உலமாக்கள் பங்கேற்கும் கருத்தரங்கில் அவர்கள் பங்கேற்றனர். இதில் ‘இந்தியாவிலும், இந்தோனேசியாவிலும் மதங்களுக்கிடையேயான அமைதி, சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பதில் உலமாக்களின் பங்கு’ என்ற தலைப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தீவிரவாதம்  இஸ்லாம் மதத்திற்கு எதிரானது. ஏனெனில் இஸ்லாம் என்றால் அமைதி மற்றும் நல்வாழ்வு  ஆகும். இந்தியாவும், இந்தோனேசியாவும் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த சவால்கள் உள்நாட்டு அளவில் சமாளிக்கப்பட்டாலும், எல்லை தாண்டிய  ஐஎஸ் ஆதரவு பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளது. எதிர்மறையான கருத்துக்கள் மூலம் ஆதிக்கம் செலுத்தும் நபர்களை கண்டறிந்து அடையாளம் காண்பதில் அரசு துறைகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். இதில் பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள உலமாக்கள் முக்கியப் பங்காற்ற முடியும். இந்தியாவும், இந்தோனேசியாவும் தான் உலகிலேயே அதிக இஸ்லாமியர்கள் வசிக்கும் நாடு. இந்தோனேஷியா உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய நாடு. முழு உலகிற்கும்  இஸ்லாத்தின் நற்பண்புகளை பரப்புவதற்கு நாம் ஒன்றாக பாடுபட வேண்டும். இவ்வாறு தோவல் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.