நூற்றுக்கணக்கான பாரம்பர்ய நெல் ரகங்கள்; புதுச்சேரிக்கு பெருமை சேர்க்கும் இயற்கை விவசாயி!

புதுச்சேரி மாநிலம், காரைக்கால், வடக்கு வரிச்சிக்குடி  கிராமத்தை சேர்ந்தவர் இயற்கை விவசாயி பாஸ்கர். இவர் நூற்றுக்கணக்கான பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு பராமரித்து வருகிறார். அவற்றை பாதுகாத்து சாதனை செய்துவருவதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

காரைக்காலில் உள்ள பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரியில் பயிலும் 40 மாணவ மாணவியர் அக்கல்லூரியின் இணைபேராசிரியர் டாக்டர் ஆனந்த்குமார் தலைமையில், பாஸ்கரின் வயலுக்குச் சென்று பயிற்சி பெற்றனர். அப்போது, பாஸ்கர் தனது அனுபவங்களை மாணவ மாணவிரிடம் பகிர்ந்தார்.

பாரம்பரிய நெல் ரகங்கள்

பாஸ்கர் பேசுகையில், “மிகவும் அதிக மருத்துவ குணங்கள் கொண்டது கறுப்புக்கவுனி. நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாகும். அதிக நார்ச்சத்து நிறைந்தது மற்றும் உடலில் நச்சுத்தன்மையை விலக்கி நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி வயிற்றுப்புண், வாயு, தோல் நோய்க்கு நல்ல மருந்தாகும். இது போன்று ஒவ்வொரு பாரம்பரிய நெல் ரகங்களுக்கும் ஒவ்வொரு குணமுள்ளது. ஆகையால் பாரம்பரிய நெல் ரகங்களை சாப்பிட வேண்டும், அதன் மூலம் `உணவே மருந்து மற்றும் மருந்தே உணவு’ என்பது வாழ்வியலாக மாறும்.

பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை ஒரு கிலோ ரூபாய் 60 -க்கு விற்கிறேன். ஒரு ஏக்கரிலிருந்து கேரளா சுந்தரி மற்றும் பாகுரூபி 6 டன்கள் வரை மகசூல் கொடுக்கும். கறுப்புக்கவுனி, மாப்பிள்ளை சம்பா சுமார் 1.8 டன் கொடுக்கும். பச்சைபெருமாள், வாழைப்பூ சம்பா ஆகிய ரகங்கள் 2 ½ முதல் 3 டன்கள் வரை விளைச்சல் தரும். நெல்லாக விற்பனை செய்வதை விட அரிசியாக மதிப்புக்கூட்டல் செய்து விற்றால் இரு மடங்கு லாபம் காணலாம். 6 பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் சில முக்கிய தானியங்களை பயன்படுத்தி மதிப்புக்கூட்டல் செய்து  சத்துமாவும்  தயாரித்து விற்பனை செய்கிறேன்” என்றார்.

இணை பேராசிரியர் டாக்டர் ஆனந்தகுமார் பேசுகையில்,

“மரபு சாரா ஆராய்ச்சியில் இயற்கையாகவே ஆர்வம் கொண்ட பாஸ்கர், இயற்கையான மகரந்த சேர்க்கை வாயிலாக அல்லது கலப்பினமாக தோன்றிய புதுமையான வடிவமைப்புகள்  கொண்ட இதுவரை அறியப்படாத சுமார் 100-க்கும் மேற்பட்ட மரபு நெல் ரகங்களை தேர்வு மூலம் அடையாளம் கண்டு, ஒவ்வொன்றையும் தனிமைபடுத்தி, பராமரித்து, அவற்றின் குணங்களை கூர்ந்து கவனித்து, தனித்துவத்தை ஆய்வு செய்து, பாதுகாத்து வருகிறார். அவர் கண்டறிந்த புதுமையான நெல் ரகங்களுக்கு தனது பெயரையே சூட்டிக்கொள்ளாமல், நெல்லப்பர் 1, 2, 100 என வரிசையாக பெயரிட்டு பாதுகாத்து வருகிறார். இந்த நெல்லப்பர் ரகங்கள் காரைக்காலின் தட்ப வெப்பநிலை, மண், தண்ணீர் ஆகியவற்றிற்கு பொருந்தும் வகையில் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளார். அவை தேசிய பல்லுயிர் பாதுகாப்புச் சட்டப்படி ஆவணமாக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு, உரிய அங்கீகாரம் கொடுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட வேண்டும்.

பாரம்பரிய நெல் ரகங்கள்

அவற்றை மேலும் ஆய்வுக்கு உட்படுத்தி காரைக்காலுக்கு ஏற்ற நெல் ரகங்களை உருவாக்கலாம். புதுச்சேரி மாநிலத்திற்கும் பெருமை சேர்த்த பாஸ்கரின் பண்ணை ஒரு `பல்லுயிர் பாதுகாப்பு மரபணு வங்கி ‘ உணவு, நுண்ணூட்டம், மற்றும் விதை பாதுகாப்பை உறுதி செய்து, நாடு தன்னிறைவு பெற ஏதுவாக பாஸ்கர் தனது பங்களிப்பை நிலைநாட்டியுள்ளார்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.