தமிழ்நாடு செவித்திறன் குறைபாடுடைய ஜூனியர் மற்றும் சப் ஜூனியருக்கான, 3-ம் ஆண்டு மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள், கடந்த நவம்பர் 25, 26, 27-ம் தேதி ஆகிய 3 நாள்கள் சென்னையில் நடைபெற்றது. 14 வயதுக்குட்பட்டோர் மற்றும் 16 வயதுக்குட்பட்டோர் என இரு பிரிவாக நடைபெற்ற இந்தப் போட்டியில், விருதுநகர் மாவட்டத்திலிருந்து சாட்சியாபுரம் சி.எஸ்.ஐ. செவித்திறன் குறைவுடையோர் பள்ளியிலிருந்து கலந் துகொண்ட மாணவர்கள், மாநில அளவில் சாதனை படைத்து பதக்கங்கள் பெற்றனர்.
இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியர் பால்ராஜ் பேசுகையில், “சென்னையில் நடைபெற்ற செவித்திறன் குறை உடையோருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில், எங்களது பள்ளியில் இருந்து 11 மாணவர்கள் கலந்து கொண்டனர். 14 வயதிற்குட்பட்டோருக்கான 600 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாணவர் கௌஷித் முதலிடம் பிடித்தார்; உயரம் தாண்டுதலில் அவர் இரண்டாவது இடம் பிடித்தார். மாணவர் லக்கி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவது இடம் பிடித்தார். 16 வயதிற்குட்பட்டோருக்கான போட்டி பிரிவில் மாணவி கற்குவேல் கவிதா, குண்டெறிதல் போட்டியில் முதலிடமும், மாணவி விஜய பாரதி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவது இடமும் பிடித்துள்ளனர்.

மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு தங்கப்பதக்கம், பாராட்டு சான்றிதழும், இரண்டாவது இடம் பிடித்தவர்களுக்கு வெள்ளிப்பதக்கம், பாராட்டு சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இன்று சொந்த ஊர் திரும்பிய மாணவர்கள், மரியாதை நிமித்தமாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து அரசு தரும் ஊக்கத்தின் அடிப்படையில் மேலும் பல போட்டிகளில் கலந்துகொண்டு மாணவ மாணவிகள் பதக்கங்களை குவிக்க ஆர்வமாக உள்ளனர். போட்டிக்கான ஒருங்கிணைப்புகளை விருதுநகர் மாவட்ட காதுக்கேளாதோர் நலச் சங்கத்தினர் செய்திருந்தனர்” என்றார்.