பிரதமர் மோடி தமிழக வருகையின்போது பாதுகாப்பு குறைபாடா?- திமுக அமைச்சர் விளக்கம்!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பில் 4.73 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

இதில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே ஆர். பெரிய கருப்பன், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே ஆர். பெரிய கருப்பன செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போத அவர் கூறியது:

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியிலும், இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 60 ற்கும் மேற்பட்ட ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார்.தலா 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 600 கிராம ஊராட்சி செயலக கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கு 89 வாகனங்கள் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பழைய கட்டிடம் 53 ஆண்டுகள் கடந்தும் வலுவாக இருப்பதாகவும், தற்போது கட்டப்படும் கட்டிடங்கள் அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் அமைய வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய தமிழக வருகையின்போது அவரது பாதுகாப்பில் குறைபாடு இருந்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, ‘பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு பாதுகாப்பாக வந்து பாதுகாப்பாகத் தான் சென்றார்’ என்று பதிலளித்த அமைச்சர் பெரிய கருப்பன், இதுகுறித்த அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார்.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன் துவக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது, அவரது பாதுகாப்பு ஏற்பாட்டில் குறைப்பாடு இருந்ததாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக அவர் நேற்று ஆளுநரையும் சந்தித்து புகார் மனு ஒன்றையும் அளி்த்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது, பாதுகாப்புப் பணியில் பயன்படுத்தப்பட்டிருந்த பல மெட்டல் டிடெக்டர்கள் பழுதடைந்திருந்தன. அவை சரியாக வேலை செய்யவில்லை.

பிரதமரின் வருகை நிகழ்வு முடிந்த பின்னர், மத்திய அரசின் ஏஜென்சிகள், மாநில அரசுக்கு ஒரு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதில், பிரதமர் வருகையின்போது மாநில அரசு போலீஸார் பயன்படுத்திய மெட்டல் டிடெக்டர்ஸ்கள் வேலை செய்யவில்லை. எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.