48,500 ஆண்டுகள் பழமையான ஜோம்பி வைரஸ்: ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

சைபீரியா: 48,500 ஆண்டுகள் பழமையான ஜோம்பி வைரஸ்களை ஐரோப்பாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

காலநிலை மாற்றம் காரணமாக ஆர்டிக், அண்டார்டிக்கா பனிப் பிரதேசங்களில் உள்ள பனிப்பாறைகள் நாளும் உருகி வருகின்றன. இதன் காரணமாக லட்சக்கணக்கான ஆண்டுகளாக புதைத்திருக்கும் ஆபத்தான வைரஸ்கள் வெளியேறும் அபாயம் உள்ளது.

இந்த நிலையில், ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உறைபனி இடத்தில் உள்ள ஏரியில் 48,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த 10-க்கும் மேற்பட்ட வைரஸ்களை ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த வைரஸ்களை ‘ஜோம்பி வைரஸ்கள்’ என்று விஞ்ஞானிகள் அழைகின்றனர்.

இப்போது கண்டறியப்பட்டுள்ள ஜோம்பி வைரஸ்களை உயிர்ப்பித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதில், “இவை பெரும்பாலும் அமீபா நுண்ணுயிரிகளைப் பாதிக்கும் திறன் கொண்டவையாகவே உள்ளன. இவை மனிதர்களைத் தாக்கும் ஆபத்து மிகவும் குறைவு” என்று ரஷ்யா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளது.

எனினும், புவி வெப்பமடைதல் காரணமாக நிரந்தர உறைபனி உருகுதல் தீவிரமாகும்போது இம்மாதிரியான வைரஸ்களால் ஆபத்து ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஜோம்பி வைரஸ்கள் பெயர்க் காரணம்: பல ஆண்டுகளாக செயலற்று இருக்கும் வைரஸ்களை விஞ்ஞானிகள் ஜோம்பி வைரஸ்கள் என்று அழைகின்றனர்.

காலநிலை மாற்றம்: காலநிலை மாற்றத்தினால் உலக நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. பெரும் வெள்ளம், புயல், அதீத மழையினால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் ஏற்படுகின்றன. மேலும் ஆர்ட்டிக், அண்டார்டிக்கா கண்டங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருவதால் உலக நாடுகள் பெரும் அபாயத்தை எதிர்கொள்ள இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், காலநிலை மாற்றத்தை சமாளிக்கவும், அதன் தீவிரத்தை குறைக்கவும் உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.