`ஜி20-க்கு தலைமையேற்ற இந்தியா' – காத்திருக்கும் சவால்கள் என்னென்ன?!

`உலக வல்லரசு நாடுகளை உள்ளடக்கியிருக்கும் ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இன்று (டிசம்பர் 1) இந்தியா ஏற்றிருக்கிறது. பொருளாதார மந்தநிலை, உணவு, எரிபொருள்களின் விலை உயர்வு, புவிசார் அரசியல் பதற்றம், மீண்டெழ முடியாத கொரோனா பெருந்தொற்று பாதிப்புகள் என உறுப்பினராக உள்ள நாடுகள் முதல் உலகநாடுகள் வரை பெரும் சவாலை எதிர்கொண்டுவரும் நிலையில் இந்தியாவின் தலைமைத்துவம் அவற்றை எப்படி சமாளிக்கும்?’

ஜி-20 – இந்தியா

ஜி-20 கூட்டமைப்பு:

தொண்ணூறுகளின் பிற்பகுதியில் ஏற்பட்ட உலகளாவியப் பொருளாதார நெருக்கடியால், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பணக்கார நாடுகள் நிதியிழப்பு, விலைவாசி உயர்வு, தட்டுப்பாடு, வேலையிழப்பு போன்றவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதுபோன்றச் சவால்களை எதிர்காலத்தில் தவிர்க்கவேண்டுமானால், பொருளாதார வளர்ச்சி வாய்ப்புள்ள வளரும் நாடுகளையும் கூட்டமைப்பாக இணைத்துக்கொள்ள வேண்டும் என வளர்ந்த பணக்கார நாடுகள் எண்ணின. அதனடிப்படையில், 1999-ம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கனடா, சவுதி அரேபியா, இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 20 நாடுகள் அடங்கிய ஜி-20 கூட்டமைப்பு.

இந்தியாவிடம் தலைமை பொறுப்பு:

ஒவ்வொரு ஆண்டும் கூட்டமைப்பில் உறுப்பினராக இருக்கும் ஒரு நாடு தலைமை தாங்கி இந்தக் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டை வழிநடத்தும். அந்தவகையில், 2022-ம் ஆண்டின் 17-வது உச்சி மாநாட்டை இந்தோனேசியா தலைமையேற்று நடத்தியது. நவம்பர் 15,16 ஆகிய இருநாட்கள் இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெற்ற மாநாட்டில், ரஷ்ய அதிபரைத் தவிர மற்ற நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். மாநாட்டின் நிறைவுநாளன்று, இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ, அடுத்த ஓராண்டுக்கான ஜி-20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியப் பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தார்.

இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ – இந்தியப் பிரதமர் மோடி

`ஒரே பூமி, ஒரே எதிர்காலம்’ – மோடி:

பொறுப்பேற்றுக்கொண்டுப் பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவின் தலைமையிலான ஜி-20 கூட்டமைப்பு அனைத்தையும் உள்ளடக்கிய லட்சியமிக்கதாக செயல்படும். பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும். அமைதி, நல்லிணக்கம் என்ற வலிமையான கருத்துகளை நாம் வலுப்படுத்தவேண்டும். `இயற்கை வளங்கள் நமக்கு சொந்தமானவை’ என்ற தனியுடமை சிந்தனையை மாற்றி, `இயற்கை வளங்களுக்கு நாம்தான் பொறுப்பு’ என்ற சுற்றுச்சூழலை பாதுகாக்கும் இந்தியாவின் கொள்கையைப் பின்பற்ற வேண்டும். இவை அனைத்துக்கும் முன்னுரிமையளிக்கும் விதமாக, இந்தியாவின் தலைமையிலான ஜி-20 கூட்டமைப்பின் கருப்பொருள் `ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என அமைக்கப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள்:

இந்தியா தனது தலைமை இலக்காக நிர்ணயித்திருக்கும் நிலையான வளர்ச்சி, பெண்களுக்கு அதிகாரம், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப மேம்பாடு, காலநிலை கட்டுப்பாடு, சர்வதேச உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, உறுப்பு நாடுகளிடையேயான பிரச்னைகளைக் களைவது போன்ற நடவடிக்கைகளில் திறம்பட செயலாற்றவேண்டிய சவாலில் இருக்கிறது. புவிசார் பிரச்னைகளைப் பொறுத்தவரையில், உக்ரைன் – ரஷ்யா போர் நடைபெற்றுவரும் சூழ்நிலையில் கூட்டமைப்பின் அங்கமான ரஷ்யாவுக்கு போரை தவிர்க்க உரிய ஆலோசனைகளை வழங்கவேண்டிய தேவையும் கடமையும் இந்தியாவுக்கு இருக்கிறது.

ஜி-20 இந்தியா

அதேபோல, அண்டை நாடான சீனாவுடனான இந்தியாவின் எல்லைப் பிரச்னை, சீனா- தைவான் இடையேயான போர்ப் பதற்றம் போன்ற பிரச்னைகளை சமாளிக்க சீனாவிடமும் சுமூகமான பேச்சுவார்த்தையை இந்தியா மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை தவிர, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு தலையாயப் பிரச்னையாக தற்போதிருக்கும் பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க ஒருங்கிணைந்த பொருளாதார ஒப்பந்தங்களை ஏற்படுத்த இந்தியா தலைமையிலான ஜி-20 கூட்டமைப்பு வழிவகை செய்யவேண்டும். அனைத்திற்கும் மேலாக, அனைத்து நாடுகளுக்கும் சவாலாக இருக்கும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த, கார்பன் உமிழ்வை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வல்லரசு நாடுகள், வளர்ந்த நாடுகளுக்கு தகுந்த வழிமுறைகளையும் இந்தியா வழங்கவேண்டிய பொறுப்பில் இருக்கிறது.

18-வது உச்சி மாநாடு, 2023, டெல்லி:

18-வது உச்சி மாநாடு, 2023, டெல்லி:

இந்தோனேசிய மாநாட்டில் அடையாளப்பூர்வமாக தலைமைப் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வமான தலைமையை இன்று டிசம்பர் 1-ம் தேதி முறைப்படி ஏற்றிருக்கிறது இந்தியா. இந்த நிலையில், அடுத்தாண்டு இந்தியத் தலைநகர் டெல்லியில் 18-வது உச்சி மாநாட்டையும் இந்தியா நடத்தவிருக்கிறது. மேலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலுள்ள வெவ்வேறு நகரங்களில் ஜி-20 கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.