வன சுற்றுப்பயண வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ரவீணா டாண்டன்

தமிழில் சாது, ஆளவந்தான் ஆகிய படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான கேஜிஎப் 2 படத்திலும் அரசியல்வாதியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் உள்ள சாத்புரா காட்டில் வன சபாரி சென்று இருந்தார் ரவீணா. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் இவர்கள் செல்லும் வாகனத்தின் முன்பாக புலி ஒன்று குறுக்கே கடந்து சென்றது. இந்த வீடியோவை பார்த்துவிட்டு சிலர் ரவீணா டாண்டன் இந்த பயணத்தில் விதிமீறல் செய்ததாக விமர்சித்தனர்.

இது குறித்து பதிலளித்த வனத்துறை உயரதிகாரி ஒருவர், இதுபற்றி வன அதிகாரிகளிடம் இருந்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அது கிடைத்த பின்னரே இந்த விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் கூறியிருந்தார். ரவீணா டாண்டனோ வனத்துறை அனுமதித்த வழிகாட்டுதலின்படி தான் தாங்கள் பயணம் செய்ததாகவும், தான் பிரபலம் என்பதாலேயே இந்த விஷயம் பரபரப்பாக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்த விலங்குகள் நல அமைப்பு மற்றும் காட்டிலாகா உயரதிகாரிகள் சிலரும் அந்த வீடியோவில் இருக்கும் காட்சிகளை பார்க்கும்போது எந்த விதி மீறலும் நடைபெறவில்லை.. சாலையின் குறுக்காக கடந்து செல்லும் புலிக்கு பார்வையாளர்கள் எந்த இடையூறும் விளைவிக்கவில்லை.. வனத்துறை அனுமதித்த சரியான பாதையில் தான் அவர்கள் பயணித்து உள்ளார்கள் என்று ரவீனா டாண்டனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு ரவீணா டாண்டன் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.