ஒட்டுமொத்த தேசமே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று (டிசம்பர் 1 ) நடைபெற்று முடிந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு தேர்தலை ஒப்பிடும்போது நேற்று கிட்டதட்ட நான்கு சதவீத வாக்குகள் குறைவாக பதிவாகி உள்ளது.
அதாவது, 2017 தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவில் அங்கு மொத்தம் 67% வாக்குகள் பதிவாகி இருந்தன. இதுவே நேற்று மொத்தம் 62.8% வாக்குகளே பாதிவாகி உள்ளன.
பொதுவாக ஆளுங்கட்சி மீது பொதுமக்களுக்கு அதிருப்தி இருப்பதும், அது சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிப்பதும் தான் உலக அளவில் இருக்கும் தேர்தல் வழக்கம்.
2006-11 ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி மீது நடைபெற்றது. அந்த ஆட்சியில் ஆண்டுக்கணக்கில் நீடித்து வந்த மின்வெட்டு பிரச்னையால் திமுக ஆட்சியின் மீது கடும் அதிருப்தியில் இருந்த வந்தனர். ஆளுங்கட்சி மீதான பொதுமக்களின் இந்த கோபம் 2011 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எதிரொலித்தது.
அந்த தேர்தலில் கிட்டதட்ட 78% வாக்குகள் பதிவாகின. எனவே, தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமானால், தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சிக்கு பாதகமாக அமையும் என்றொரு பொதுவான புரிதல் உண்டு. மாறாக, தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தால், அது ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமையும் என்றொரு கருத்தும் தேர்தல் அரசியலில் கூறப்படுவது உண்டு.
ஆனால், குஜராத்தை பொறுத்தவரை கடந்த ஐந்து முறையாக தொடர்ந்து பாஜகவே ஆட்சிபுரிந்து வருவதால், வாக்குப் பதிவு சதவீதம் குறைவது ஆளுங்கட்சியான பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என்று திட்டவட்டமாக சொல்வதற்கு இல்லை என்கின்றனர் அரசியல் விமர்சனங்கள். காரணம், மத்திய பாஜக ஆட்சியில் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் தொடர்ந்து பாதித்துவரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல். டீசல் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பொது பிர்ச்னைகளை குஜராத் மாநில மக்களுக்கு சந்தித்து தான் வருகின்றன. எனவே இது தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்.
ஒரு வேளை, தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்தால் அது ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமையும் என்ற தியரி, இந்த முறையும் குஜராத்தில் ஒர்க் அவுட் ஆனால், அதற்கு மோடி மீது குஜராத் மக்களுக்கு இருக்கும் செல்வாக்கு மட்டுமே காரணமாக இருக்கும். அங்கு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர போவது காங்கிரஸா, ஆம் ஆத்மியா? என்பதுதான் இந்த தேர்தலில் முக்கிய விஷயமாக இருக்கும் என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.
குஜராத்தில் குறைந்தபட்சம் 8% சதவீதம் வாக்குகளை பெற்றால், ஆம் ஆத்மிக்கு தேசிய கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளதால், அஙகு அக்கட்சி தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது. இது பாஜகவுக்கா, காங்கிரஸுக்கா சிக்கலை ஏற்படுத்தும் என்பது தேர்தல் முடிவில் தெரிந்துவிடும்.