சென்னை: புழல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள தொழிற்சாலை கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு 4 வாரங்களி்ல் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா கண்ணம்பாளையம் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த எம்.மல்லிகா, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: புழல் ஊராட்சி ஒன்றியத்தில் கவுன்சிலராக உள்ளேன். எங்கள் பகுதியில் எந்த அனுமதியும் இன்றிதொழிற்சாலைகளுக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. புழல் பகுதி, சிஎம்டிஏ கட்டுப்பாட்டின்கீழ் வருகிறது. சட்டவிரோத கட்டிடங்கள் குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
ஏற்கெனவே 2012-ம் ஆண்டு போலியாக கட்டிட அனுமதி வழங்கியதாக புழல் ஊராட்சி ஒன்றிய தலைவருக்கு எதிராக புகார்கள் சென்றதால், சட்டவிரோத கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், அதன்பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட விளாங்காடுபாக்கம் கிராமஊராட்சி பகுதிகளில் போதியகுடிநீர் வசதி இல்லை.
இதுபோன்ற சட்டவிரோத தொழிற்சாலை கட்டிடங்களை முறைப்படுத்தி, அரசுக்கு செலுத்த வேண்டிய உரிய கட்டணங்களை வசூலித்தால் அதன்மூலம் பிற பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியும். எனவே, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக சிஎம்டிஏ மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் 4 வாரகாலத்துக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.