புதுச்சேரி: மாணவ, மாணவிகளின் புதுப்பிக்க ஆதார் விவரங்களை வரும் 25-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய அனைத்து பிராந்தியங்களிலுள்ள பள்ளிகளுக்கும் புதுச்சேரி கல்வித் துறை இயக்குநர் ருத்ரகவுடு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன் விவரம்: “பள்ளிக் குழந்தைகளின் ஆதார் எண் விவரம் கோரி பெங்களூரிலுள்ள ஆதார் மண்ட அலுவலக துணை இயக்குநர் ஜெனரல் கடிதம் அனுப்பியுள்ளார். பள்ளி மாணவர்கள் சேர்க்கை, உதவித்தொகை பெறவும், பல்வேறு வாரியம் மற்றும் பிற போட்டித் தேர்வுகளில் பங்கேற்கவும் ஆதார் எண் தேவைப்படுகிறது. முக்கியமாக 5 மற்றும் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட ஆதார் எண்ணை உறுதி செய்ய பயோமெட்ரிக் புதுப்பிக்க வேண்டும்.
5 மற்றும் 15 வயதில் ஆதாரில் உள்ள பயோமெட்ரிக்ஸின் கட்டாயப் புதுப்பிப்பு செய்யப்படாவிட்டால், அந்த குறிப்பிட்ட மாணவரின் ஆதார் எண் செயல் இழந்து விடும். அதனால் 5 மற்றும் 15 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களும் ஆதாரில் பயோமெட்ரிக் கட்டாய புதுப்பிப்பை முடித்திருப்பதை பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும்.
இந்த கட்டாய பயோமெட்ரிக் ஆதார் புதுப்பிக்க பெற்றோர்களையும், மாணவர்களையும் பள்ளித் தரப்பு அறிவுறுத்தவேண்டும். பொது சேவை மையங்கள் அல்லது கட்டாய புதுப்பிப்பை இலவசமாக செய்யும் பிற நிறுவனங்களை அணுகி இதை செய்யக் கூறலாம். அதிகமானோருக்கு புதுப்பிக்க வேண்டி இருந்தால், மாணவர்களின் பள்ளிகளே சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யலாம்.
சமக்ரா சிக்ஷா நடத்தும் முகாம்களுக்கு பள்ளிகள் காத்திருக்க வேண்டியதில்லை, ஏனெனில் குறைந்த வளங்கள் மற்றும் குறுகிய கால இடைவெளியுடன் அனைத்து பள்ளிகளின் தேவைகளையும் பூர்த்தி செய்ய அதிக நேரம் ஆகலாம். இப்பணிகளை முடித்து அனைத்து நிறுவனத் தலைவர்களும் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட பட்டியலை வரும் டிசம்பர் 25-க்குள் கல்வித்துறைக்கு சமர்பிக்க வேண்டும்.
அனைத்து ஆய்வு அதிகாரிகளும் தங்கள் பள்ளிகளில் இதை நிறைவு செய்வதை உறுதி செய்யவேண்டும். தலைமைச்செயலரின் அறிவுறுத்தப்படி இச்சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.