பெங்களூரு: முஸ்லிம் மாணவிகளுக்கென தனி கல்லூரிகளை ஏற்படுத்தும் திட்டம் கர்நாடக அரசுக்கு இல்லை என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகளுக்கென 10 கல்லூரிகளைக் கட்ட வக்ஃப் வாரியத்துக்கு மாநில அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதாக வக்ஃப் வாரிய தலைவர் தெரிவித்திருந்தார். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இந்தக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறி இருந்தார்.
இந்நிலையில், பசவராஜ் பொம்மை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த பசவராஜ் பொம்மை, “இது பற்றி எனக்கு தெரியாது. வக்ஃப் வாரிய தலைவரின் கருத்தாக அது இருக்கலாம். கர்நாடக அரசின் எந்த ஓர் அங்கமும் இது குறித்து விவாதிக்கவில்லை” என தெரிவித்தார்.
இதையடுத்து கர்நாடக வக்ஃப் வாரியம் மற்றும் ஹஜ் அமைச்சரான சசிகலா ஜோல்லி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “இஸ்லாமிய மாணவிகளுக்காக தலா 2.5 கோடி ரூபாயில் 10 கல்லூரிகள் அமைக்க வக்ஃப் வாரியத்துக்கு மாநில அரசு ஒப்புதல் வழங்கியதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. இது வக்ஃப் வாரிய தலைவரின் தனிப்பட்ட கருத்து. இது குறித்து வக்ஃப் வாரிய தலைவரிடம் நான் பேசினேன். தற்போது எழுந்துள்ள இந்த குழப்பத்தை தீர்வு காணுமாறு அறிவுறுத்தி உள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மகாராஷ்டிரா – கர்நாடக இடையேயான எல்லைப் பிரச்சினை தற்போது தீவிரமடைந்திருப்பதால், மகாராஷ்ட்ர மாநில அமைச்சர்கள் யாரும் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக மகாராஷ்டிர தலைமை செயலாளருக்கு கர்நாடக தலைமைச் செயலாளர் கடிதம் எழுதி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.