'ஆன்லைன்' ரம்மி சூதாட்ட விளம்பரம் : சரத்குமார் மீது போலீசில் புகார்

சென்னை: 'தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் 'ஆன்லைன்' ரம்மி சூதாட்டத்தை ஊக்கப்படுத்தி, விளம்பரத்தில் நடித்த, நடிகர்கள் சரத்குமார், பிரேம்ஜி ஆகியோரை கைது செய்ய வேண்டும்' என போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுபவர் தமிழ்வேந்தன். இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அளித்த புகார்: 'ஆன்லைன்' ரம்மி சூதாட்டத்தால், தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. 18 வயதுக்கு கீழ் உள்ள, சிறார்களுக்கும், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் மூழ்கி கிடக்கினர். பலர் மன நலம் பாதிக்கப்பட்ட நபர்களாக மாறிவிட்டனர். இத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை, திரைத்துறை பிரபலங்கள் வாயிலாக விளம்பரம் செய்வது வெட்கக்கேடானது.

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில், அதிக பணம் சம்பாதிக்கலாம் என, நடிகர்கள் சொல்லும்போது, அதை பொது மக்கள் உண்மை என, நம்பி விடுகின்றனர். அந்த நடிகர்களின் ரசிகர்கள், சூதாட்டத்தில் மூழ்கி வாழ்வை சீரழித்துக் கொள்கின்றனர். விளம்பரங்களில் நடிப்பது எங்கள் தனிப்பட்ட உரிமை என, நடிகர்கள் தெரிவிப்பது ஏற்புடையது அல்ல; அவர்களுக்கும் சமூக பொறுப்புணர்வு உள்ளது.

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் குறித்த விளம்பரத்தில் நடித்துள்ள சரத்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., ஒரு கட்சியின் நிறுவனர். இவருக்கு பின் ரசிகர்கள், தொண்டர்கள் இருக்கின்றனர். இவரை நடிகர் என்ற குறுகிய வட்டத்தில் பார்க்க முடியாது.

அதேபோல, பிரேம்ஜியின் தந்தை கங்கை அமரனும், சமூக பொறுப்பு மிக்கவர். இவரது மகன், பல குடும்பங்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்துள்ள ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளம்பரத்தில் நடித்து இருப்பது, மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர்கள் சரத்குமார், பிரேம்ஜி ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும். இவர்கள் நடித்துள்ள ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளம்பரத்தை, உடனடியாக தடை செய்ய வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.