விசேட தேவையுடையோரின் நலனுக்காக ,புதிய வேலைத்திட்டம் – ஜனாதிபதி

விசேட தேவையுடையவர்களின் நலனுக்காக புதிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

விளையாட்டு, சுகாதாரம், இளைஞர் விவகாரம் உள்ளிட்ட பல அமைச்சுக்களின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்படும் இப்புதிய வேலைத்திட்டத்தை விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

2022 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு இன்று (03) முற்பகல் அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

பல்வேறு திறன்களைக் கொண்ட விசேட தேவையுடையவர்கள் இருப்பதனால், அவர்களின் படைப்புத் திறமைகளை நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்காக திறம்பட பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

அரச நிறுவனங்களில் விசேட தேவையுடையோரின் நலன் தொடர்பில் நிலவும் குறைபாடுகள் குறித்து கவனத்திற்கு கொண்டு வந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், அது தொடர்பில் ஆராய்ந்து அத்துறைகளில் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தலைமைச் செயலகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, சமூக வலுப்படுத்துகை இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல், மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தலைமைச் செயலகத்தின் பணிப்பாளர் அனுராதா ஹேரத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

President’s Media Division

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.