நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 7ஆம் தேதி தொடங்குகிறது. வழக்கமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பரில் நடைபெறும். ஆனால் குஜராத், இமாச்சலப் பிரதேச மாநிலங்களுக்கான தேர்தல், புதிய நாடாளுமன்ற கட்டடப் பணிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்தாண்டு டிசம்பர் மாதம் குளிர் காலக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கும் கூட்டத்தொடர் டிசம்பர் 29ஆம் தேதி வரை 17 அமர்வுகளாக நடைபெற இருக்கிறது.
பொதுவாக கூட்டத்தொடரை நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துவது மரபாக உள்ளது. இதில் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள், எதிர்க்கட்சிகள் கோரிக்கை, நிறைவேற்ற வேண்டிய மசோதாக்கள் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படும். இந்நிலையில், இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சியின் ஒத்துழைப்பையும் மத்திய அரசு நாடியுள்ளது. இதற்காக வரும் 6ஆம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்காக மக்களவை மற்றும் மாநிலங்களவை கட்சி தலைவர்களுக்கு அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.
துணை ஜனாதிபதி தான் ராஜ்யசபா தலைவராக உள்ளார். எனவே துணை ஜனாதிபதியாக ஜக்தீப் தங்கர் தேர்வான பிறகு, பதவியேற்கும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும். மேலும், இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்தியா – சீனா எல்லை விவகாரம், பொருளாதாரம், வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கூறினார். இது குறித்து அவர் கூறும் போது, ‘‘பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, யாத்திரையில் கவனம் செலுத்தும் வகையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரை புறக்கணிக்க வாய்ப்பு உள்ளது. அதேசமயம் தாழ்த்தப்பட்டவர்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை பாதிக்காத வகையில், ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை செயல்படுத்த காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்’’ என ஜெயராம் ரமேஷ் கூறினார்.
வலுக்கும் மோதல்; உச்சநீதிமன்றத்திற்கு துணை ஜனாதிபதி கண்டனம்.!
இந்தநிலையில் காங்கிரஸ் எம்பி கேசி வேணுகோபால் கூறும்போது, ‘‘ பிரிவினை மேலோங்கி இருக்கும் இன்றைய காலகட்டத்தில், நாட்டின் ஒற்றுமையை பேண ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். நாட்டை ஒற்றுமை படுத்த பாதயாத்திரையில் தான் ராகுலின் கவனம் உள்ளது. எனவே பாதயாத்திரை நடந்து வரும் வேளையில், குளிர்கால கூட்டத்தொடரில் கலந்து கொள்வது என்பது நடைமுறை சாத்தியமில்லாதது. மேலும் இது கவனச் சிதறல்களையும் ஏற்படுத்தும். இன்று காங்கிரஸ் கட்சியின் வியூகக்குழு சந்திப்பு நடைபெற்றது. இதனுடைய இரண்டாம் அமர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ராய்பூரில் மூன்று நாட்கள் நடைப்ற உள்ளது’’ என அவர் தெரிவித்தார்.