சபரிமலை,
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டதால் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் தினமும் வருகிறார்கள்.
நவம்பர் 16-ந் தேதி நடை திறந்த முதல் இன்று வரை 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இருப்பினும் கோவிலுக்கு இருமுடி கட்டி வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று ஒரே நாளில் இதுவரை 58,480 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். ஞாயிற்றுகிழமையான நேற்று 55,145 பேர் தரிசனம் செய்துள்ள நிலையில் இன்று அதிகமாக தற்போதுவரை 58,480 பேர் தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை அய்யப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டு அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 89,737 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.