திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.
தமிழத்தில் சிறப்பு வாய்ந்த கோவிலாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் பௌர்ணமி கிரிவலம் என பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத் திருவிழா மிகவும் பிரபலமானதாகும்.
கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
திருவண்ணாமலை மாவட்ட அருணாச்சலேஸ்வரர் தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து நாளை ( டிசம்பர் 6ஆம் தேதி) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
இந்த நிலையில் தற்போது இன்று முதல் தெற்கு ரயில்வே சார்பாக 8ம் தேதி வரை திருவண்ணாமலைக்கு 24 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை, திருவண்ணாமலை வரை 4 சிறப்பு ரயில்களும், டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்கள் என மொத்தம் 24 சிறப்பு ரயில்கள் உட்பட 63 ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.