பத்திரிக்கையாளர்களை சந்தித்த மோடி: குஜராத்தில் நடைபெற்ற சம்பவம்!

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் இறுதி கட்ட வாக்குப்பதிவு காலை முதல் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி அகமதாபாத் நகரில் உள்ள பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார். காலை 9 மணி நிலவரப்படி 4.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

குஜராத் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான இங்கு, கடந்த 24 ஆண்டுகளாக, பாஜக ஆட்சிக் கட்டிலில் உள்ளது. இந்த நிலையில் 182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, டிசம்பர் 1ம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடைபெற்றது. இன்று டிசம்பர் 5ம் தேதி இறுதி கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது.

அதேபோல், ஐந்து மாநிலங்களில் காலியாக உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. உத்தர பிரதேசத்தில் உள்ள மணிப்பூரி மக்களவை தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தல் நடைபெறும் உத்தர பிரதேசம், ஒடிசா, சத்தீஷ்கர் ராஜஸ்தான், பீகார் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபப்ட்டுள்ளன.

அகமதாபாத் நகரில் உள்ள பள்ளியில் பிரதமர் மோடி வாக்குசாவடி மையத்திற்கு சென்று வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். வழக்கமாக பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்க்கும் பிரதமர் மோடி இன்று குஜராத் வாக்கு பதிவை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “குஜராத், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் டெல்லி மக்களால் ஜனநாயக திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டு மக்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். தேர்தலை அமைதியாக நடத்திய தேர்தல் ஆணையத்துக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.

அதிமுகவில் நடக்க உள்ள மாற்றம்: டெல்லி சென்றால் வழி பிறக்குமா?

இரண்டு கட்டத் தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள், டிசம்பர் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்டத் தேர்தலில் மொத்தம் 62.8% வாக்குகளே பதிவாகி இருந்தன. இந்நிலையில் இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகரிக்குமா குறையுமா என்று எதிர்பார்ப்பு உள்ளது.

வாக்கு சதவீதம் குறைந்தால் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்குமா, பாதகமாக இருக்குமா, பாஜகவின் ஆட்சி நீடிக்குமா, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் குஜராத்தில் புதிய வரலாறு எழுதப்படுமா, அது 2024 மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்குமா என பல கேள்விகள் அரசியல் அரங்கில் சுழன்றடிக்கின்றன. இவை அனைத்துக்கும் டிசம்பர் 8ஆம் தேதி அதிகாரபூர்வ விடை கிடைத்துவிடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.