மதுரை: டிசம்பர் 6-ம் தேதியையொட்டி மதுரையில் முக்கிய வழிப்பாட்டுத் தலங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில், விமான நிலையங்களிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பாபர் மசூதி இடிப்பு தினமான டிச.6-ம் தேதியையொட்டி இந்தியா முழுவதும் முக்கிய வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்துவது வழக்கம். இவ்வாண்டுக்கான டிச.6-ம் தேதியொட்டி மதுரையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம் முருகன், அழகர்கோயில், பழமுதிர்சோலை, தெப்பக்குளம் மாரியம்மன் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து, ரயில் நிலைய வளாகம், தண்டவாள பகுதியில், அலுவலகங்கள் ஒவ்வொரு இடத்திலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், மோப்ப நாய் உதவியுடன் நேற்று முதல் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். ரயில்களில் வந்து இறங்கும் பயணிகளின் உடைமைகளும், ரயில் நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் நபர்களின் உடைமைகளும் தீவிர பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றன.
குறிப்பாக பார்சல் அலுவலக பகுதியில் தொடர்ந்து போலீஸ் மோப்ப நாய்களுடன் பொருட்களை வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் ஆய்வு செய்கின்றனர். மதுரை விமான நிலையத்திலும், விமான பாதுகாப்பு படையினருடன் இணைந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப் பட்டுள்ளது. சந்தேகிக்கும் நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். விமான நிலையத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் ஆய்வு செய்கின்றனர்.
பெரியார், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையங்களிலும் கூடுதல் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இது போன்ற இடங்களிலும், பொது இடங்களிலும் அனாதையாக கிடக்கும் பொருட்களை யாரும் எடுக்கக்கூடாது என, பயணிகள், பொதுமக்களுக்கு போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மதுரை நகர், மாவட்ட எல்லைகளிலுள்ள சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சந்தேகிக்கும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, சோதனைக்கு பிறகு அனுப்புகின்றனர். மதுரை நகர், மாவட்டத்திலுள்ள முக்கிய தலைவர்களின் சிலைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. எவ்வித சமூக விரோத நிகழ்வாக இருந்தாலும், உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.