அண்ணா நகரில் திக் திக் பயணம்… ஒரே வருஷம் தான்… வேற மாதிரி மாத்தும் தமிழக அரசு!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகரில் திருமங்கலம் ஜங்ஷன் பகுதியில் இருக்கும் உள்வட்ட சாலை ஆனது (Inner Ring Road) போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படுகிறது. இது கோயம்பேடு மார்க்கெட் மற்றும் வட சென்னை ஆகியவற்றை இணைக்கும் சாலையாக உள்ளது. எனவே நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். குறிப்பாக திருமங்கலத்தில் இருந்து 300 மீட்டர் அருகில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிக்கு அருகில் உள்வட்ட சாலையை பாதசாரிகள் கடந்து செல்வதில் பல்வேறு சிரமங்கள் நீடித்து வருகின்றன.

40 நிமிடங்கள் மட்டும்

ஏனெனில் நடுவில் ஒரு தடுப்பு இருக்கிறது. இதில் ஒரே ஒரு ஸ்டீக் கேட் பொருத்தப்பட்டு திறந்து மூடும் வகையில் அமைத்துள்ளனர். இது காலை, மாலை என இருவேளைகளில் 40 நிமிடங்கள் மட்டும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் வசதிக்காக திறக்கப்படும். மற்ற நேரங்களில் மூடப்பட்டு விடும். தடுப்பின் வேறெந்த பகுதியிலும் வழி இருக்காது. இதனால் தடுப்பின் மீது ஏறி குதித்து பொதுமக்கள் செல்கின்றனர்.

செம ஸ்பீடாக செல்லும் வாகனங்கள்

இந்த வழியாக வாகன ஓட்டிகள் அதிவேகத்தில் வருவதால் விபத்து ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. சாலையில் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் வாகனங்கள் பயணித்தால் அது பொதுமக்களுக்கு ஆபத்தான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திருமங்கலம் அருகே உள்வட்டச் சாலையில் 80 கிலோமீட்டர் வேகம் வரை பயணிப்பதை பார்க்க முடிகிறது. இது நிலைமையை மேலும் மோசமாக்கும் சூழலுக்கு தள்ளுகிறது.

அரசுக்கு கடிதம் எழுதிய சங்கங்கள்

கேந்திர வித்யாலயா பள்ளி அருகில் மாதந்தோறும் குறைந்தது 5 விபத்துகள் ஏற்பட்டு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதில் இருவர் உயிரிழப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக அப்பகுதி குடியிருப்புவாசிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நலச் சங்கங்கள் உள்ளிட்டவை அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வந்துள்ளனர். திருமங்கலம் பகுதியில் பாதசாரிகள் நடந்து செல்ல போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

டெண்டர் கோரிய நெடுஞ்சாலைத் துறை

இதைக் கருத்தில் கொண்டு அப்பகுதியில் நடை மேம்பாலம் அமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை முன்வந்துள்ளது. ஓராண்டிற்கு மேம்பாலம் கட்டி முடிக்கும் வகையில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த பாலம் 5 மீட்டர் அகலத்தில் இருபுறமும் படிக்கட்டுகள், எஸ்கலேட்டர்கள், ஏதேனும் ஒருபுறம் லிப்ட் வசதி கொண்டதாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான செலவு ஒரு கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இதற்கு அண்ணா நகர் பகுதி மக்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர். விரைவாக பணிகளை முடித்தால் விபத்து தொடர்பான அச்சம் நீங்கி மகிழ்வான பயணத்தை மேற்கொள்ளலாம். காலை, மாலை வேளைகளில் ஸ்டீல் கேட்டை திறந்து போலீசார் கண்காணிப்பு வேலையில் ஈடுபடத் தேவையில்லை. நடை மேம்பாலம் மூலம் பயணம் எளிதாகும் எனத் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.