தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.இது மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிற ஆறாம் தேதி மாலை தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும்.
அதன் பிறகு மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து டிசம்பர் 8ம் தேதி காலை வட தமிழகம்-புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் அருகில் வந்தடைய கூடும். இன்றும், நாளையும் தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதன் காரணமாக இன்று முதல் மழை பெய்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, அதன் பின்னர், மேற்கு மற்றும் வடமேற்கில் நகர்ந்து படிப்படியாக புயலாக வலுபெற்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் முதல்கட்டமாக, மீனவர்கள் நாளை முதல் தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருவாக வாய்ப்பு உள்ளதால், அரக்கோணம் முகாமில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விரைகின்றனர்.