பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மே 29-ம் தேதி பட்டப்பகலில் பஞ்சாப் மாநிலம் மன்சா மாவட்டத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்கு சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஸ்னொய் மற்றும் கனடாவில் பதுங்கி இருக்கும் கோல்டி பிரர் (Goldy Brar) ஆகியோர் பொறுப்பு ஏற்றனர். திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாரன்ஸை பஞ்சாப் போலீஸார் தங்களின் காவலில் எடுத்திருக்கின்றனர்.
கனடாவில் பதுங்கி இருந்த கோல்டி பிரருக்கு நெருக்கடி ஏற்பட்டு அமெரிக்க சென்றதாகவும் அங்கு கலிபோர்னியாவில் அவன் கைது செய்யப்பட்டதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இதையடுத்து கோல்டி பிரர் விரைவில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்திக்கொண்டு வரப்படுவான் என்று பஞ்சாப் முதல்வர் மான் தெரிவித்திருந்தார். ஆனால் இதில் புதிய திருப்பமாக தன்னை யாரும் கைது செய்யவில்லை என்று கோல்டி பிரர் தெரிவித்திருக்கிறார்.

யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “என் பெயர் கோல்டி பிரர். என்னை யாரும் கைது செய்யவில்லை. நான் அமெரிக்காவில் இல்லை” என ஆடியோ நேர்காணல் மூலம் பத்திரிகையாளர் ஒருவருக்கு தெரிவித்திருக்கிறார். ஆனால் அது கோல்டி பிரரா அல்லது வேறு யாருமா என்று இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. கோல்டி பிரரின் இந்தப் பேட்டி பஞ்சாப் முதல்வரின் கருத்துக்கு நேர் மாறாக அமைந்திருக்கிறது.
இது குறித்து பஞ்சாப் எதிர்க்கட்சித்தலைவர் பிரதாப் சிங் கூறுகையில், “மத்திய உள்துறை அமைச்சகம் கோல்டி பிரர் கைது செய்யப்பட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பு வாக்காளர்களை கவரும் நோக்கில் பஞ்சாப் முதல்வர் மான் பஞ்சாப் பாடகர் சித்து கொலையில் தொடர்புடைய கோல்டி பிரர் கைது செய்யப்பட்டதாக அறிவித்திருக்கிறார்” என்று குற்றம்சாட்டினார்.