“அரசு ஊழியர்கள் விடுப்பின்றி பணிக்கு வரவேண்டும்!” – புயல் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. இது புயலாக மாறி நாளை வியாழக்கிழமை மாலை சென்னை – காரைக்காலுக்கு இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அப்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது புதுவையிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. அதனால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி புதுவை அரசுக்கு அறிவுறுத்தியிருக்கிறது மத்திய அரசு.

ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி

அதன் தொடர்ச்சியாக தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர் வல்லவன் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய மாவட்ட ஆட்சியர் வல்லவன், “புதுவைக்கு வந்திருக்கும் பேரிடர் மீட்புக் குழு புதுச்சேரியிலும், காரைக்காலிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மின் கம்பி, மரம் விழுந்தால் உடனே சீரமைக்க வேண்டும். ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் உணவு தயாரிக்க தேவையான வசதிகள் தயாராக இருக்க வேண்டும்” என்று கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“தீயணைப்பு நிலையங்களில் வீரர்கள் தயார் நிலையில் இருப்பர். படகுகளும் தயார் நிலையில் இருக்கும். பாதிப்பு என்றால் 10, 15 நிமிடங்களில் செல்வோம். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்ல கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 1070, 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி  எண்கள் மூலம் பொதுமக்கள் தொடர்பு  கொள்ளலாம். நீர் தேங்கும் பகுதிகளில் உடனடியாக நீரை வெளியேற்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கடலுக்கு சென்ற 2,354 படகுகள் கரைக்கு திரும்பி விட்டன. மழையை எதிர்கொள்ள புதுவை அரசு தயார் நிலையில் உள்ளது” என்றார்.

இன்று சட்டசபையில் அரசுத்துறை அதிகாரிகளுடன் புயல், மழையை எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து,  கேபினட் அறையில் ஆலோசனை நடத்தினார் முதல்வர் ரங்கசாமி. அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை புதுவையில் கனமழை என்றும்,சுமார்  70 முதல் 90 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளது. புதுவை, காரைக்கால், தமிழக பகுதிகளில் புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கையாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறைவாரியாக அறிவுறுத்தியுள்ளோம். அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளன. அனைத்து அரசு ஊழியர்களும், அதிகாரிகளும் விடுப்பின்றி பணியில் இருக்க உத்தரவிட்டுள்ளோம். தேவையான நிதியை நிதித்துறை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வருவாய்த்துறை மூலம் மக்களுக்கு தேவையான வசதிகள், உதவிகள் செய்யப்படும். தேவைப்பட்டால் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்லவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மின்துறை, தீயணைப்புத்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட அறிவுறுத்தியுள்ளோம். பாதிக்கப்பட்டால் மதிப்பீடு செய்யப்பட்டு நிவாரணம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். புதுவைக்கு வந்துள்ள பேரிடர் மீட்புக் குழுவையும் பயன்படுத்திக்கொள்வோம். மழையால் பாதிக்கப்பட்டால் மக்களை தங்க வைக்க 238 முகாம்கள் அமைக்கப்பட உள்ளது. 75,000 பேருக்கு நாள்தோறும் உணவு வழங்க கல்வித்துறைக்கு உணவு வழங்கும் அட்சயபாத்திரா நிறுவனம் தயாராக உள்ளது. கூடுதல் உணவு தேவைப்பட்டால் எம்.எல்.ஏ-க்கள் அந்தந்த தொகுதிகளில் உள்ள சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்களை பயன்படுத்திக்கொள்ளும்படி தெரிவித்துள்ளோம். பள்ளி, விடுமுறை குறித்து அந்நேரத்தில் அறிவிக்கப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.