கீழடியின் பொருட்களுக்கான அகழ் வைப்பக அருங்காட்சியகம்! ஒப்பந்தபுள்ளிக்கு நாளை கடைசிநாள்!

கீழடி அகழ் வைப்பகத்தில் தொல்லியல் பொருட்கள் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. 
கீழடியில் கிடைத்த பழமையான பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் அகழ் வைப்பக அருங்காட்சியகப் பணியானது 11.30 கோடி ரூபாய் செலவில், மொத்தம் 31,919 சதுரஅடி பரப்பளவில் 6 முக்கிய கட்டடத் தொகுதிகளை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசால் கட்டப்பட்டு வரும் கீழடி அகழ் வைப்பகத்திற்கான பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், தொல்லியல் பொருட்களை காட்சிப்படுத்துவதற்கான மரப்பலகை, கண்ணாடி பெட்டிகள், விளக்குகள் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக அரசால் அகழாய்வில் கிடைத்த தொல்லியல் பொருட்களைக் காட்சிப்படுத்துவதற்கு நிரந்தர அகழ் வைப்பகம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதன் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான பொருட்களை காட்சிப்படுத்துவதற்கான அறைகலன்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
image
இந்த அகழ் வைப்பகம் ரூ.11 கோடியே 30 லட்சம் செலவில் செட்டிநாடு கட்டிடக் கலை பாணியில் உருவாக்கப்பட்டு வருகிறது. அருங்காட்சியகத்தின் உள்ளே பாரம்பரியமான ஆத்தங்குடி தரைத்தளக் கற்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்லியல் பொருட்களை பழமை மாறாமல் காட்சிப்படுத்துவதற்கு ஏதுவான கண்ணாடி சட்டங்கள், மர சுவர்கள், பெட்டிகள் உள்ளிட்ட அறைகலன்களை அமைத்துத் தருவதற்காக 1.90லட்ச ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தப்புள்ளியை தமிழக பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான விண்ணப்பத்திற்கு நாளை கடைசிநாள் எனவும், நாளை மறுநாள் ஒப்புந்தப்புள்ளி திறக்கப்பட்டு, குறைவான விலையில் கோரியுள்ள நிறுவனங்களுக்கு இப்பணி ஒதுக்கீடு செய்யப்படும் என பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான விண்ணப்பங்களை www.tntenders.gov.in மற்றும் www.tenders tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
image
தற்போது 95 சதவிகிதப் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், பொருட்களைக் காட்சிப்படுத்துவற்கான பணிகள் நிறைவு பெற்றவுடன் அகழ் வைப்பகம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்படும் எனவும், இந்த அகழ் வைப்பகத்தைப் பார்வையிட வரும் பொதுமக்களிடம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்தும் எவ்வளவு கட்டணம் என்பது குறித்தும் விரைவில் தெரிவிக்கப்படும் எனவும் தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.