ஜல்லிக்கட்டுக்கு ஒன்றிய அரசு ஆதரவு: உச்ச நீதிமன்றத்தில் தகவல்

புதுடெல்லி: தமிழகத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கு நாங்கள் ஆதரவு என ஒன்றிய அரசு வக்கீல் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, கர்நாடகத்தில் கம்பாலா உள்ளிட்ட மிருகங்களை கொண்டு நடத்தப்படும் விளையாட்டுகளை அனுமதிக்கும் வகையில் மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தங்கள் மற்றும் புதிய விதிமுறைகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் ஐந்தாவது நாளாக நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி,‘‘கலாச்சாரத்தை காப்பது என்பது அந்தந்த அரசுகளின் கடமை. இதை அரசியல் சாசனமும் பிரிவு 29ல் தெளிவாகக் கூறியுள்ளது.

அந்த அடிப்படையில் ஜல்லிக்கட்டு என்ற தமிழர்களின் கலாச்சாரத்தை காப்பது தமிழ்நாடு அரசின் கடமை மட்டுமில்லாமல் பெரிய பொறுப்பாகவும் உள்ளது.   வெறும் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல அது தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளமாகும்.  ஜல்லிக்கட்டு தொடர்பான ஏராளமான சுடுமண் சிற்பங்கள் உள்ளிட்டவையும் தொல்பொருள் ஆய்வுகளில் கிடைத்திருக்கிறது. சங்க காலத்து தமிழ் இலக்கியங்களான தொல்காப்பியம், கலித்தொகை உள்ளிட்டவற்றின் ஏறுதழுவுதல் என்ற பெயரில் ஜல்லிக்கட்டின் முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 396 ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் சுமார் 1,15,000 காளைகளும் கலந்து கொண்டுள்ளது. ஆனால் வெறும் ஏழே இடங்களில் சில புகைப்படங்களை எடுத்துவிட்டு ஜல்லிக்கட்டு முழுமையாக விதிமுறை மீறி நடத்தப்படுகிறது என விலங்குகள் அமைப்புகள் சொல்வது ஏற்க கூடியது அல்ல’’என தெரிவித்து ஜல்லிக்கட்டு தொடர்பான புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார்.  

ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,‘‘ஜல்லிகட்டு விளையாட்டை பொருத்தமட்டில் எந்த விதி மீறலும் கிடையாது.  இதில் சட்ட விதிகள் மீறுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5லட்சம் அபராதமும் விதிக்கப்படுவதாக சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. ஜல்லிக்கட்டு விவகாரத்தை ஆய்வு செய்த நிபுணர் குழு கூட அதில் எந்த விதி மீறல்களும் இல்லை என தெளிவாக தெரிவித்துள்ளது. மேலும் இது மாநில அரசின் கொள்கை சார்ந்த விவகாரம் ஆகும். அதனால் கலாச்சார விளையாட்டில் எப்படி தலையிட முடியும். மேலும் இதுகுறித்த சிறப்பு சட்டத்திற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கியுள்ளார்.   அதனால் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவு என்பது தான் ஒன்றிய அரசின் நிலைப்பாடாக உள்ளது. மேலும் அதற்கு தடை விதிக்கவும் முடியாது’’ என தெரிவித்தார். இதையடுத்து இன்றும் வாதம் தொடர்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.