மஹாலட்சுமி லே அவுட், : பிரபல பல்கலைக் கழகங்கள் சார்பில், போலி மதிப்பெண் பட்டியல் சான்றிதழ்கள் தயாரித்து, லட்சக் கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேர் கும்பலை, சி.சி.பி., போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு மஹலாட்சுமி லே அவுட்டில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்ஸ்டிடியூட் என்ற பெயரில் நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனம், பிரபல பல்கலைக் கழகங்களில் மதிப்பெண் பட்டியல் சான்றிதழ், பட்டபடிப்பு சான்றிதழ்கள் பெற்று தருவதாக கூறி, போலி சான்றிதழ்கள் வழங்குவதாக, சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மேலும், கடந்த நவம்பர் 2ம் தேதி அந்நிறுவனத்துக்கு சென்ற ஒரு பெண்ணிடம், ‘பி.காம்., படிப்பு முடித்துள்ளதாக சான்றிதழ் பெற்று தருகிறோம், 1 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதை நம்பி, 40 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். ‘தேர்வு எப்போது’ எனக் கேட்டதற்கு, ‘நாங்களே தேர்வு எழுதி மதிப்பெண் பட்டியல் பெற்று தருகிறோம்’ என நம்ப வைத்துள்ளனர்.
நவம்பர் 26ம் தேதி, பி.காம்., முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மதிப்பெண் பட்டியல், அந்த பெண்ணின் வாட்ஸ் ஆப்பிற்கு வந்தது. மூன்றாம் ஆண்டு மதிப்பெண் பட்டியல் கேட்ட போது, மீதி பணம் செலுத்தினால் பெற்று தருவதாக கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்து சி.சி.பி.,யிடம் புகார் செய்தார்.
விசாரணையில், நகரின் மாரத்தஹள்ளி, கோடிகேஹள்ளி ஆகிய பகுதிகளிலும் கிளைகள் துவங்கி, ஆன்லைனில் விளம்பரம் வழங்கி பலரை ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, மூன்று சிறப்பு படைகள் அமைத்து அந்நிறுவனத்தின் மூன்று அலுவலகங்களில் சி.சி.பி., போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். 12 மணி நேரம் நடந்த சோதனையில், 1,097 போலி மதிப்பெண் சான்றிதழ்கள், முனைவர் படிப்பு சான்றிதழ்கள், பிரின்டர், எட்டு மொபைல் போன்கள், சீல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நிறுவனத்தின் முக்கியஸ்தர் சீனிவாஸ் ரெட்டி, 42, உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஒவ்வொரு மதிப்பெண் பட்டியலுக்கும், தலா 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளனர்.
முனைவர் படிப்பு சான்றிதழுக்கு 10 லட்சம் முதல், 20 லட்சம் ரூபாய் வரை வசூலித்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை, பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி நேற்று பார்வையிட்டார். அவர் கூறுகையில், ”இவ்வழக்கில், தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகிறோம். பொதுமக்கள் போலி விளம்பரங்களை நம்பி ஏமாறக் கூடாது,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்