மோர்பி பயண செலவு ரூ.30 கோடி என மோடி குறித்து டிவிட்; திரிணாமுல் காங். தலைவர் கைது: அகமதாபாத் போலீசார் அதிரடி

அகமதாபாத்: மோர்பி தொங்கு பாலம் விபத்து பகுதிக்கு பார்வையிட சென்ற பிரதமர் மோடியின் பயணத்திற்காக ரூ.30 கோடி அநாவசியமாக செலவிடப்பட்டதாக வந்த போலி செய்தியை டிவிட்டரில் பகிர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சங்கீத் கோகலேவை அகமதாபாத் போலீசார் இரவோடு இரவாக மடக்கி பிடித்து கைது செய்தனர். குஜராத்தின் மோர்பி பகுதியில் பழமையான தொங்கு பாலம் கடந்த அக்டோபரில் அறுந்து ஆற்றில் விழுந்தது. இதில் 135 பேர் பலியாயினர். இந்த விபத்து நடந்து 2 நாட்களுக்குப் பிறகு, மோர்பி பாலப் பகுதியை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

அப்போது, பிரதமரின் வருகையையொட்டி, விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றவர்கள் இருந்த மருத்துவமனைக்கு வெள்ளை அடிக்க ரூ.8 கோடியும், புதிய சாலை அமைக்க ரூ.11 கோடியும், பிரதமரை வரவேற்க ரூ.3 கோடியும், அவரது பாதுகாப்பிற்கு ரூ.2.5 கோடியும், பாலத்தை பார்வையிடும் நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கு ரூ.2 கோடியும், போட்டோ எடுக்க ரூ.50 லட்சமும் செலவிடப்பட்டதாக ஆர்டிஐ மூலம் தகவல் கிடைத்ததாக குஜராத் மொழி பத்திரிகைகளில் செய்தி வெளியானதாக அதன் புகைப்படத்தை திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சங்கீத் கோகலே கடந்த 1ம் தேதி தனது டிவிட்டரில் பகிர்ந்தார்.

அதே தினத்தில் இது போலியான தகவல் என ஒன்றிய அரசின் பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவு உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து பாஜ தலைவர் அமித் கோத்தாரி அகமதாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று அதிகாலை சங்கீத் கோகலேவை கைது செய்தனர். சம்பந்தப்பட்ட குஜராத்தி மொழி பத்திரிகை இதுபோன்ற எந்த செய்தியையும் பிரசுரிக்கவில்லை என்றும் அது ஜோடிக்கப்பட்ட புகைப்படம் என்றும் போலீசில் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.