ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில், ‘குவாலிட்டி டிரேடர்ஸ், ரிலீஃப் ஹெர்பல் ப்ராடக்ட்’ என்ற பெயரில் மூலிகை மருந்து தயாரிக்கும் ஆலை கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டது. இந்நிறுவனத்தை கெம்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த தங்கராஜ் தலைமையில் துரைசாமி, புளியங்கோம்பை பிரகாஷ், கோனார்நாயக்கன்பாளையம் ஆனந்தகுமார், பவானி ஆண்டிபாளையம் பிரபாகரன், சத்தி வடக்குப்பேட்டை பொன்னுசாமி ஆகியோர் இந்த ஆலையின் பங்குதாரர்களாக இருந்தனர். ஆஸ்துமா, கை கால் குடைச்சல், மூலம் போன்றவற்றுக்கு இந்நிறுவனம் தயாரிக்கும் மூலிகை மருந்தை பயன்படுத்தினால் உடனடி நிவாரணம் அளிக்கும் எனக் கூறி பிரபலப்படுத்தி வந்தனர்.
இந்த ஆலையில், ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், முதல் 100 நாள்களுக்கு தினந்தோறும் ரூ.2,500 வீதம் ரொக்கமாகவோ அல்லது வங்கி மூலமாக அனுப்பி வைக்கப்படும் என்றும், 100-வது நாள் முடிவில் முதலீடு செய்த அசல் தொகை முழுவதையும் திருப்பித் தருவதாகவும் அறிவித்திருந்தனர். அதேபோல, ரூ.10 ஆயிரம் முதலீடு செய்தால், 100 நாள்களுக்கு தினந்தோறும் ரூ.100 வீதமும், 100 நாள்களுக்குப் பின்பு முதலீடு செய்த தொகை முழுவதும் திரும்பத் தருவதாகவும் விளம்பரப்படுத்தியிருந்தனர்.
இந்த கவர்ச்சிகரமான அறிவிப்பை நம்பி ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், தூத்துக்குடி, மதுரை, கடலூர், விருதுநகர், விழுப்புரம், திண்டுக்கல், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் இந்த ஆலையில் முதலீடு செய்தனர். இவ்வாறு பெற்ற முதலீட்டாளர்களுக்கு, முதல் 2 மாதங்கள் மட்டுமே தொகையை திருப்பி தந்தனர். அதற்குள் ஏராளமானவர்கள் இங்கு முதலீடு செய்திருந்த நிலையில், 100 நாள்களுக்குப் பின்பு முதலீட்டு தொகையை திரும்ப வழங்கவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில், சத்தியமங்கலம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து பங்குதாரர்களைக் கைதுசெய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. தற்போது வரையிலும், இந்நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை பறிகொடுத்ததாக மேலும், 13 பேர் மட்டுமே புகார் அளித்துள்ளனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் உடனடியாக ஈரோடு ஸ்டேட் பேங்க் சாலையில் உள்ள ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் எனத் காவல் ஆய்வாளர் உமா மகேஸ்வரி தெரிவித்தார்.
இது குறித்து நம்மிடம் பேசிய அவர், “சங்கரன்கோயிலைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவர்தான் மூலிகை மருந்து உற்பத்தி நிறுவனத்தின் மோசடி குறித்து முதலில் புகாரளித்தார். அவர் இந்நிறுவனத்தில் ரூ.3 லட்சம் முதலீடு செய்திருந்த நிலையில், 2 மாதங்கள் மட்டும் அவர்களுக்கு சொன்னபடி தொகையை அளித்துள்ளனர். அதன்பின் முதலீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இந்நிறுவனம் இதுவரை ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக 13 பேர் புகார் அளித்துள்ளனர். எனவே இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து இதுவரை புகார் அளிக்காதவர்கள் 88073 28868 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகாரளிப்பது குறித்து ஆலோசனை பெறலாம்.
மற்றொரு சீட்டு மோசடி புகார் இதேபோல புஞ்சை புளியம்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ்- தமிழரசி ஆகியோர் அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்துவதாகக் கூறி 2021-ம் ஆண்டு ரூ.40 லட்சம் தொகையுடன் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர். இவர்களிடமும், சீட்டு போட்டு ஏமாந்ததாக இதுவரை 20 பேர் புகாரளித்துள்ளனர். இந்த வழக்கிலும், இதுவரை புகாரளிக்காதவர்கள் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகாரளிக்கலாம். இந்த இரு மோசடியிலும் பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகார்களின் பெயரில் வழக்கு பதிவுசெய்து கோவையிலுள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) மூலம் தொகை கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.