சென்னை: கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆவடி தொகுதி திமுக வேட்பாளர் ஆவடி நாசர் தொடர்ந்த தேர்தல் வழக்கில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு நடந்த பொதுத் தேர்தலில் ஆவடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட மாஃபா பாண்டியராஜன் 1,395 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகளில் பாண்டியராஜன் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆவடி நாசர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன்பு இன்று (டிச.7) விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் நேரில் ஆஜராகி, சாட்சிக் கூண்டில் ஏறி வாக்குமூலம் அளித்தார்.
அப்போது அவர், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட 28 லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளதாக கூறிய குற்றச்சாட்டை மறுப்பதாகவும், முறையாக தேர்தல் கணக்கை தாக்கல் செய்ததாகவும் தெரிவித்தார். மேலும், தேர்தல் வழக்கில் கூறப்பட்ட மற்ற குற்றச்சாட்டுக்களையும் மறுத்துள்ளார்.
பாண்டியராஜனிடம் திமுக வேட்பாளர் ஆவடி நாசர் தரப்பு குறுக்கு விசாரணை முடிவடையாததால், வழக்கின் விசாரணை நாளைக்கு (டிச.8) தள்ளிவைக்கப்பட்டுள்ளது.