5 ஆண்டுகளில்… எம்எல்ஏ – எம்பிக்களுக்கு எதிராக 56 வழக்குகள் பதிவு

நாட்டில் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களுக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளில் 56 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது.

நாடாளுமன்றத்தில் குளிர் கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. வரும் டிசம்பர் 29 ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில், நாட்டில் அதிகரித்து வரும் வேலை வாய்ப்பின்மை விவகாரம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இது தவிர, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் மசோதாவை கொண்டு வர வேண்டும், போதை பொருள் வினியோகம் மற்றும் நுகர்வு அதிகரிப்பு பற்றிய விவாதம், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவது உள்ளிட்ட விவகாரங்களை பற்றி கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட வேண்டும் என பல்வேறு கட்சி சார்பில் கோரிக்கைகளும் விடப்பட்டு உள்ளன.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில் மக்களவையில், அதிகாரிகள் மற்றும் பயிற்சி துறை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கமொன்றில், நாட்டில் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களுக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான (அக்டோபர் 31 வரை) கடந்த 5 ஆண்டுகளில் சி.பி.ஐ. 56 வழக்குகளை பதிவு செய்துள்ளது.

அவற்றில் 22 வழக்குகளில் அவர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்குகளில் ஆந்திர பிரதேசம் (10 வழக்குகள்) முதல் இடத்தில் உள்ளது. கேரளா மற்றும் உத்தர பிரதேசம் (தலா 6 வழக்குகள்) இரண்டாவது இடத்தில் உள்ளன. மேற்கு வங்கம் மற்றும் அருணாசல பிரதேசம் (தலா 5 வழக்குகள்) அடுத்த இடத்தில் உள்ளன. தமிழகத்தில் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களுக்கு எதிராக மொத்தம் 4 வழக்குகளை சி.பி.ஐ. அமைப்பு பதிவு செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.