சென்னை: தலித்துகளுக்கு அரசியல் அதிகாரம் பெற்றுத் தரும் கட்சியாகதமிழக காங்கிரஸ் செயல்படும்என்று தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.அணி தலைவர் எம்.பி. ரஞ்சன்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் காங்கிரஸ்தான் தலித்துகளுக்கு முக்கியத்துவம் தரும் கட்சியாக உள்ளது. 1962-ல் டி.சஞ்சீவய்யா, 1969-ல் பாபு ஜெகஜீவன்ராம் ஆகிய தலித்துகள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களாக பதவி வகித்து பெருமை சேர்த்தனர். தற்போது மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1954-ல் காமராஜர் முதல்வராக பொறுப்பேற்றதும், 8 பேர் கொண்ட அமைச்சரவையில் தலித் சமுதாயத்தை சார்ந்த பி.பரமேஸ்வரனை அறநிலையத் துறை அமைச்சராக நியமித்ததைவிட புரட்சிகரமான நடவடிக்கைவேறு இருக்க முடியாது. தியாகிபி.கக்கனுக்கு உள்துறை அமைச்சர், பொதுப்பணி துறை அமைச்சர் பதவி வழங்கினார். அரசியலமைப்பு சட்டத்தை தயாரிக்கும் பொறுப்பை அம்பேத்கரிடம் வழங்கிய பெருமை காந்தியடிகளுக்கும், முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும் உண்டு.
காங்கிரஸ் கட்சியில் சாதிய மனோபாவம் இருக்கிறது என்று சிலர் கூறுகின்றனர். இது அபத்தமான கருத்து. சட்டப்பேரவை தேர்தலில் 18 இடங்களில் காங்கிரஸ்வெற்றி பெற்றது. அந்த 18 பேரில் 2 பேர் மட்டுமே தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். அதில் ஒருவரை சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவராக நியமித்த பெருமை காங்கிரஸுக்கு மட்டுமே உண்டு.
வெளியில் இருக்கும் தலித் செயற்பாட்டாளர்கள், பிற தலித் அமைப்புகளை ஒன்றிணைத்து, ஒருங்கிணைத்து தலித்துகளுக்கு அரசியல் அதிகாரம் பெற்று தரும் கட்சியாக காங்கிரஸ் செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.