குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து, இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வருகிறது. இதில், பெரும்பாலான இடங்களில் பா.ஜ.க முன்னிலை வகிக்கிறது. மொத்தமுள்ள 182 இடங்களில் 154-க்கும் அதிகமான இடங்களில் பா.ஜ.க முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 18 இடங்களிலும், ஆம் ஆத்மி 6 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது.
இந்த நிலையில், மத்திய குஜராத் மண்டலமான ஆனந்த் மாவட்டத்தின் சட்டமன்ற தொகுதியான பெட்லாட் தொகுதியில், பா.ஜ.க, காங்கிரஸ் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவியது. இந்தத் தொகுதியில் மொத்தம் 8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் பா.ஜ.க சார்பில் கமலேஷ் படேல், காங்கிரஸ் சார்பில் டாக்டர் பிரகாஷ் பர்மர், ஆம் ஆத்மி சார்பில் அர்ஜுன்பாய் சிதாபாய் பர்வாத் ஆகியோர் குறிப்பிடதக்கவர்கள்.

கடந்த 20 ஆண்டுகளாக காங்கிரஸ் அந்த தொகுதியின் பிரதான கட்சியாக தனது இடத்தை தக்கவைத்திருந்தது. அதற்கு காரணமானவர், ஆறு முறை அந்தத் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்த நிரஞ்சன் படேல் எனத் தெரிகிறது. ஆனால், இந்த முறை அவருக்கு பதிலாக, டாக்டர் பிரகாஷ் பர்மர் என்பவரை வேட்பாளராக்கியது காங்கிரஸ். அதனால், இந்த முறை அந்த தொகுதியில் பா.ஜ.க-வின் வேட்பாளர் கமலேஷ் படேல் 17,954 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றிருக்கிறார். இதன் மூலம், 20 ஆண்டுகளாக தனது கைவசம் இருந்த பெட்லாட் தொகுதியை காங்கிரஸ் இழந்துவிட்டது.