சினிமா பெண்கள் அமைப்பால் என்ன பயன்? விமர்சித்த சுவாசிகா

தமிழ் சினிமாவில் கடந்த 2009-ல் வெளியான வைகை படத்தில் கதாநாயகியாக நடித்தவர் விசாகா. அதைத்தொடர்ந்து ஒன்றிரண்டு தமிழ் படங்களில் நடித்தாலும் சொல்லிக்கொள்ளும்படியாக அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. பின்னர் மலையாளத்தில் சுவாசிகா என தனது பெயரை மாற்றிக்கொண்டு தற்போது பிசியான குணச்சித்திர நடிகையாக வலம் வருகிறார், கடந்த 2020ம் வருடம் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான கேரள அரசு விருதையும் வென்றார்.

அதுமட்டுமல்ல தனது பேட்டிகளிலும் எந்த ஒரு கருத்தையும் துணிச்சலாக வெளியிடவும் தயங்காதவர் சுவாசிகா. அதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் விதமாக தற்போது மலையாள திரையுலகில் பார்வதி, ரம்யா நம்பீசன், ரேவதி உள்ளிட்டோரின் தலைமையில் செயல்பட்டு வரும் சினிமா பெண்கள் நல அமைப்பு (WCC) குறித்து இவர் கூறிய கருத்துக்கள் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

சமீபத்திய பேட்டி ஒன்றில் இவரிடம் திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்றும், அங்கே நடைபெறும் பாலியல் அத்து மீறல்கள் குறித்தும் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சுவாசிகா, “இந்த திரையுலகில் யாரும் உங்களை இவருடன் தான் படுத்து உறங்க வேண்டும் என கட்டாயப்படுத்துவது இல்லை.. நாம் வேண்டாம் என்றால் யாரும் நம்மை வற்புறுத்த போவதுமில்லை. அதேபோல இரவு உங்களுடைய அறைக்கதவை யாராவது தட்டினால், நீங்களே திறந்தால் தவிர எப்படி வேறு ஒருவர் உள்ளே நுழைய முடியும். எதற்காக அந்த சமயத்தில் கதவைத் திறக்கிறீர்கள்? மது அருந்தவும் அந்த நேரத்தில் உரையாடவும் சம்மதிக்கிறீர்கள் ? பிரச்சினையை தேவையில்லாமல் இழுத்துக்கொள்வது நாம்தான்.. அப்படி உங்களுக்கு ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டால் கூட, எதற்காக நீங்கள் சினிமா பெண்கள் நல அமைப்பை நாடுகிறீர்கள்? நீங்கள் காவல் நிலையத்திலோ அல்லது பெண்கள் ஆணையத்திடமோ சென்று பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள முடியும்.. சினிமா பெண்கள் நல அமைப்பில் உங்களது பிரச்சினைகளை சொன்னால் உடனடியாக உங்களுக்கு நீதி கிடைக்கும் என்கிற உத்தரவாதம் யாரும் தர முடியாது” என்று கூறியுள்ளார்.

அவரது ஒரு கருத்து பரபரப்பை ஏற்படுத்தினாலும் பெண்கள் நல அமைப்பில் உள்ளவர்களிடம் இருந்து இவரது கருத்துக்களுக்கு இன்னும் யாரும் பதில் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.