சிவகங்கை மாவட்டம், சிவகங்கை பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற நகராட்சி பெண் அலுவலரை தன்னுடைய பொருட்கள் மீது கைவைத்தால் அடிப்பேன் என திமுக பிரமுகர் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை பேருந்து நிலையத்தில் நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடையில் வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர் தீப்பற்றி விபத்து ஏற்பட்டது.
இந்நிலையில் இந்த கடைகளில் அனுமதியின்றி கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதாகவும் பயனிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ஆக்கிரமிப்புகள் அதிகமிருப்பதாகவும் வந்த புகாரை தொடர்ந்து இன்று நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி, நகராட்சியின் நகர் மற்றும் ஊரமைப்பு அலுவலர் திலகவதி தலைமையிலான ஊழியர்கள் வரி கட்டாத கடைகளுக்கு சீல் வைத்ததுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
இந்நிலையில் அங்குவந்த நகராட்சி ஒப்பந்ததாரரும் திமுக பிரமுகருமான சுந்தரபாண்டி தன்னுடைய பொருட்களை யார் அகற்றியது என கேட்டு தகராறில் ஈடுபட்டதுடன் நகரமைப்பு அலுவலர் திலகவதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தன்னுடைய பொருட்கள் மீது கைவைத்தால் அடிப்பேன் என்றும் மிரட்டல் விடுத்தார். இதனை அங்கிருந்த ஊழியர்கள் செல்போனில் வீடியோ எடுத்ததுடன் அங்கிருந்தவர்கள் அவரை சமாதானம் செய்து அழைத்து சென்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.