முதல்வருக்கு கடிதம் எழுதிய 3 ஆம் வகுப்பு மாணவி: பரிசாய் கிடைத்த பதில்

பள்ளி மாணவி ஒருவர் தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதம் பலரது கவனத்தை கவர்ந்துள்ளது. இவர் தனது பள்ளிக்காக இடம் கேட்டு முதல்வருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி பஞ்சாயத்தில் வினைதீர்த்தநாடார்பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் அருகில் உள்ள திப்பணம்பட்டி, மடத்தூர், கல்லூரணி, சிவகாமியாபுரம், அரியபுரம், பாவூர்சத்திரம், கீழப்பாவூர் என பல கிராமங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். 

பல கிராம மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியில் தேவை ஏற்பட்டதால், 2018 ஆம் ஆண்டுதான் இப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. எனினும், இதற்கு தேவையான முழுமையான கட்டமைப்பு வசதிகள் இன்னும் இங்கே செய்யப்படவில்லை. கூடுதல் வகுப்பறைகளும் இன்னும் கட்டப்படாமல் உள்ளன. இந்த பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான பல வசதிகள் இல்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்

இந்த நிலையில், பள்ளியின் நிலையை விளக்கி இப்பள்ளியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஆராதனா என்ற மாணவி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தனக்கு உள்ள பிரச்சனைகளை கடிதத்தில் அழகாக விளக்கியுள்ள அந்த மாணவி பல யதார்த்தமான உண்மைகளையும் புரிய வைத்துள்ளார். அந்த கடிதம் தற்போது வைரலாக பரவி வருகின்றது. 

பள்ளி மாணவி தனது கடிதத்தில், “நான் தமிழ்வழிக் கல்வியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறேன். எனது ஆசிரியர்கள் நன்றாகக் கற்றுக் கொடுக்கிறார்கள். எங்கள் பள்ளி வளாகத்தில் இடவசதியே இல்லை. விளையாட்டு மைதானம் கிடையாது. என்னுடைய தனித்திறைமைகளை வளர்த்துக்க எந்த வசதியும் இல்லை. அதனால் என்னை ஆறாம் வகுப்பில் வேறு பள்ளியில் சேர்க்கப் போவதாக பெற்றோர் சொல்கிறார்கள். ஆனால் எனக்கு இந்த அரசுப் பள்ளியில் படிக்க வேண்டும் என்பது தான் விருப்பம். ஆனால் இங்கு இடவசதி இல்லாததால் எல்லோரும் கஷ்டப்படுகிறார்கள்.

எங்கள் பள்ளிக்கு அருகில் திருமலை கோயிலுக்குச் சொந்தமான இடம் கிடக்கிறது. எனது பெற்றோர் பேசும்போது, ’இந்த கோயில் இடத்தை முதலமைச்சர் நினைத்தால் கொடுக்க முடியும்’ என்றார்கள். அதனால் அவர்களிடம், “நானே முதல்வருக்கு கடிதம் எழுதி அந்த இடத்தைக் கொடுக்குமாறு கேட்பேன்” என்று சொல்லி இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அதனால் அந்த இடத்தைக் கொடுத்து நாங்கள் எல்லோரும் இங்கேயே படிக்க உதவுங்கள். நீங்கள் 8-ம் தேதி தென்காசி வரும்போது உங்களை நேரில் சந்தித்து மனு கொடுக்க ஆசைப்படுகிறேன். அதை நிறைவேற்றிக் கொடுங்கள், ஐயா” என்று எழுதியுள்ளார்.

ஆராதனாவுக்கு தற்போது நல்ல செய்தி கிடைத்துள்ளது. வினைதீர்த்த நாடார்பட்டி அரசுப் பள்ளி 3-ஆம் வகுப்பு மாணவியின் கோரிக்கைக்கு ஏற்ப, ரூ. 35.5 லட்சத்தில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.