வலுவடையும் மாண்டஸ் புயல்; பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை… விமானம், பேருந்துகள் ரத்து!

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியிருக்கும் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக ‘மாண்டஸ்’ வலுப்பெற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது. இன்று (08.12.2022) காலை 8:30 மணி நிலவரப்படி, காரைக்காலுக்குக் கிழக்கு-தென்கிழக்கே 460 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 550 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டிருக்கிறது.

மாண்டஸ் புயல்

தற்போதைய நிலவரப்படி மாண்டஸ் புயலின் வேகம் மணிக்கு 6 கி.மீ-லிருந்து 12 கி.மீ-ஆக அதிகரித்திருக்கிறது. புயலின் காரணமாகக் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கக் கூடும். மேலும், நாளை நள்ளிரவு வாக்கில், புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே புயல் கரையைக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை காலை வரை தீவிர புயலாக நகரும் மாண்டஸ், பின் சற்று வலுகுறைந்து கரையைக் கடக்க வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆறு மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கத் தலைமைச் செயலாளர் அறிவுரை வழங்கியிருந்தார்.

சென்னை மழை – மாண்டஸ் புயல்

இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 12 மாவட்டங்களிலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், நாளை நடக்கவிருந்த அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல், மற்றொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன.

மாண்டஸ் புயல் நாளை கரையை கடக்கக்கூடும் என்று சொல்லப்படும் நிலையில் இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் இரவு நேரங்களில் அரசுப் பேருந்து இயங்காது என்று அரசு அறிவித்திருக்கிறது. அதேபோல், பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருக்கும் நிலையில், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியிருக்கிறார்.

மாண்டஸ் புயல்

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் வரும் 9, 10-ம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமானச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. சென்னையிலிருந்து தூத்துக்குடி, சீரடி, மங்களூர் செல்லும் ஆறு விமானங்கள் ரத்துசெய்யப்பட்டிருக்கின்றன. அதேபோல, சென்னையிலிருந்து சிங்கப்பூர், இலங்கை, மும்பை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் 11 விமானங்கள் தாமதமாகப் புறப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.