வாஷிங்டன்: உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் என்று அமெரிக்காவின் ஆசிய ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்காவின் ஆசிய ஒருங்கிணைப்பாளர் கர்ட் கேம்ப்பெல், இந்திய – அமெரிக்க உறவு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார். அவர் கூறியதாவது: “இந்தியா தனித்துவமான நாடு. அது அமெரிக்காவின் அணியில் இருக்கும் நாடாக இருக்காது. சுதந்திரமான, சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் இந்தியாவுக்கு இருக்கிறது. அது மற்றொரு உலக சக்தியாக திகழும்.
ஒவ்வொரு துறையிலும் இந்தியா – அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவு வளர்ந்து வருகிறது என்பதை நம்புவதற்கு பல்வேறு காரணிகள் இருக்கின்றன. இந்திய – அமெரிக்க உறவுக்கு லட்சியம் இருப்பதாக நான் நம்புகிறேன். விண்வெளி, கல்வி, காலநிலை மாற்றம், தொழில்நுட்பம் என எதுவாக இருந்தாலும் இந்தியா, அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுகிறது. ஒரே குறிக்கோளுடன் இரு நாடுகளின் பயணம் உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா – அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவுக்கு இணையாக வேறு எந்த ஒரு இருதரப்பு உறவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அமெரிக்கா தனது சக்திக்கு அப்பாற்பட்டு இந்தியாவில் முதலீடுகளைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது. இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவையும், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவதையும் மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
இந்திய – அமெரிக்க உறவு, சீனாவை மையமாகக்கொண்ட பதற்றத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்படவில்லை. இது நமது சமூகங்களுக்கிடையே உள்ள ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டிருப்பதன் ஆழமான புரிதலே இதன் அடிப்படை. அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள், இந்தப் பிணைப்புக்கு முக்கிய காரணம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.