நியூயார்க்: போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக ரஷ்யாவால் சிறைத் தண்டனை பெற்ற அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனர் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு நாடு திரும்புகிறார்.
அமெரிக்க கூடைபந்து வீராங்கனை பிரிட்னி கிரைனர் கடந்த பிப்ரவரி மாதம் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யா சென்றபோது, அவரிடம் நடத்திய சோதனையில் சட்டவிரோத போதைப் பொருட்கள் கைபற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து பிரிட்னி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையில் பிரிட்னிக்கு ரஷ்ய நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பிரிட்னி கிரைனரை விடுதலை செய்ய ரஷ்யா சம்மதம் தெரிவித்தது. ஆனால், 12 ஆண்டுகளாக அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல ஆயுத வியாபாரி விக்டர் போட் என்பவரை ரஷ்யாவிடம் ஒப்படைத்தால், சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனரை அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
ரஷ்யாவின் நிபந்தனையை அமெரிக்காவும் ஏற்றுக்கொண்டது. இதனைத் தொடர்ந்து சிறைக் கைதிகள் இருவரையும் தற்போது ரஷ்யா – அமெரிக்கா பரிமாறிக் கொண்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து பிரிட்னி கிரைனர் அமெரிக்க திரும்புகிறார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, “பிரிட்னி அமீரகத்தில் தற்போது பாதுகாப்பாக இருக்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் நாடு திரும்புகிறார்” என்றார். வெள்ளை மாளிகை தரப்பில், “பிரிட்னி நல்ல மனநிலையில் இருக்கிறார். அவர் முழுமையாக மீண்டுவர நேரம் தேவை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.