மாண்டஸ் புயலால் முடங்கியது போக்குவரத்து சேவை; பயணிகள் அவதி.!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் 28ம் தேதி தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக நடப்பு ஆண்டில் அதிக புயல்கள் உருவாகும் எனவும், அதிக
மழை
பொழிவு இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி தற்போது தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலமானது “மாண்டஸ்” புயலாக வலுவடைந்தது.

இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரி கோட்டவிற்கு இடையே இன்று நள்ளிரவு கரையை கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நேற்று முதல் வருகிற 11ம் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும், கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று மற்றும் தரைக்காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

அதன்படி இன்று இரவு சென்னையை நோக்கி புயல் நெருங்கியதால், காற்றின் வேகமும் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சூறைக் காற்றுடன் மழை பெய்துவருகிறது. தொடர் மழை பொழிவால் பல்வேறு இடங்களில் நீர் தேங்கி வெள்ளம் சூழந்துள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் சுரங்கப்பாதைகள், சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. புயல் கடக்கும் கடற்கரை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டது. நாளை அதிகாலை புயல் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததுள்ளதால், அதனால் இன்று நள்ளிரவு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் எச்சரித்துள்ளது.

இந்தநிலையில் தற்போது மாண்டஸ் புயலின் வெளிப்புற பகுதி மாமல்லபுரத்தை கடக்க தொடங்கியுள்ளது. அதனால் சென்னை மற்றும் காஞ்சிபுரம் கடற்கரையோர பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசிவருகிறது. சூறாவளி காற்றுடன் தொடர் மழை பெய்துவருவதால் ,சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

கடும் சூறைக்காற்று மற்றும் தொடர் மழை காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்லக்கூடிய புறநகர் ரயில்களும், மதுரை விழுப்புரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் இரவு நேர ரயில்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வேத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் பேருந்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழக்கு கடற்கரை சாலைக்கு முன்னதாக இரண்டு மணி நேரம் நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்க துவங்கியுள்ளதால் பேருந்துகளை தற்பொழுது இயக்க வேண்டாம் எனவும், புயல் கரையை கடந்த பிறகு பேருந்த இயக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

நாளை அதிகாலை 3 மணி அளவில் புயல் கரையைக் கடக்கும் என்பதால், அதுவரை பேருந்துகளை நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பலத்த காற்றும் மற்றும் தொடர் மழை காரணமாக, இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.