சென்னை: மாண்டஸ் புயலின் மையப்பகுதி தற்போது கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயலின் பின் பகுதி அடுத்த 1 மணி நேரத்தில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கியது. புயலின் மையப்பகுதி 2 முதல் 3 மணி நேரத்தில் கரையை கடக்கும் என நள்ளிரவு நேரத்தில் தெரிவிக்கப்பட்டது. அதே போலவே மையப்பகுதி கரையை தற்போது கடந்துள்ளது. இந்த புயல் தலைநகர் சென்னையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு தென்கிழக்கு திசையில் புயல் நகர்ந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் தீவிர புயலாக உருவான மாண்டஸ் வலுவிழந்து புயலின் மையப்பகுதி கரையை கடந்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் மழை பொழிவு தொடர்ந்து இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதியில் கனமழை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மற்றும் மழை காரணமாக சென்னை நகரில் மரங்களும் விழுந்துள்ளன.
இந்த புயல் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது. இந்த புயலால் காட்டுப்பாக்கத்தில் அதிகபட்சமாக 16 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.