சென்னை: மாண்டஸ் புயல் அடுத்த 2 முதல் 3 மணி நேரத்திற்குள் முழுமையாக கரையை கடந்து விடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடந்த பிறகும் மழை தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையை நோக்கி தற்போது புயல் நகர்ந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயலின் மையப்பகுதி தமிழக தலைநகர் சென்னையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகவும். மாமல்லபுரத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை – நுங்கம்பாக்கத்தில் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்தாலும் மழை பொழிவு தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் வெள்ளி இரவு 10 முதல் 12 வரையிலான இரண்டு மணி நேரத்தில் சராசரியாக 13.13 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.