ரூ.1.14 கோடியில் அமைக்கப்பட்டு உதயநிதியால் திறக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மெரினா மரப்பாலம் 12 நாளில் உடைந்து நொறுங்கிய பரிதாபம்…..!

சென்னை: மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரையை கண்டு ரசிக்கும் வகையில், தமிழகஅரசும், மாநகராட்சியும் ரூ.1.14 கோடி செலவில் அமைத்து, திறக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான   கடற்கரை மரப்பாலம் 12 நாளில் உடைந்து நொறுங்கிய பரிதாபம் ஏற்பட்டுள்ளது. இது சென்னை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், சேதமடைந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை விரைவில் சீர் செய்யப்படும் என மாநகர மேயர் பிரியா தெரிவித்து உள்ளார்.

இந்தியாவிலே முதல்முறையாக சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளும் கடல் அலையைக் கண்டுகளிக்க ஏதுவாக  ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ள இந்த  மரத்திலான நடைபாதை 263 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், மணற்பரப்பில் இருந்து ஒரு மீட்டர் உயரமும் கொண்டது. இந்த நடைபாதையில் சிரமம் இன்றி மாற்றுத்திறனாளிகள் செல்லலாம். சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் இந்த நடைபாதை வழியாக சென்று கடல் அழகை ரசித்து மகிழலாம்.

இந்த நடைபாதையை கடந்த 27ஆம் தேதி  சேப்பாக்கம் எம்எல்ஏவும், முதல்வரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. திறந்துவைத்தார். இதைத்தொடர்ந்தே அவரே மாற்றுத்திறனாளிகளின் வண்டியை தள்ளிச்சென்று அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். இந்த மகிழ்ச்சி 10நாட்கள் கூட நீடிக்கவில்லை.

இந்த மரப்பாலம் உறுதியாக இல்லை என்றும், விடுமுறை தினங்களில் அதிக அளவிலான மாற்று திறநாளிகள் வந்தால்,  தாங்குமா என்று சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில், தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பலகையிலான பாலம் மற்றும் பாதை கடல் அலையின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் உடைந்து நொறுங்கி உள்ளது. அதுவும் மாண்டஸ் புயல் காரணமாக கடந்த இருநாட்களாக அலைகள் ஆர்ப்பரித்து வரும் நிலையில், மரப்பாலமும், பலகையும் கடுமையாக சேதமடைந்துள்ளது. இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி மேயர் பிரியா, சேதமடைந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை விரைவில் சீர் செய்யப்படும் எனதெரிவித்துள்ளார்.

கடல் அலை சீற்றம் காரணமாக மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த அமைக்கப்பட்ட பிரத்யேகமான பாதை சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஏற்கனவே முறையாக அமைக்கபடாமலும், போதுமான பலமின்மையால் பாலம் ஆங்காங்கே சிறுக சிறுக சேதமடைந்து வந்த நிலையில், தற்போது அடித்த காற்று மற்றும் கடல்அலைக்கு தாக்குபிடிக்க முடியாமல் பெரும் சேதமடைந்துள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறை என்று தம்பட்டம் அடித்த தமிழகஅரசு, அதை தனது மகனும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவை கொண்டும், திறந்து வைத்த முதல்வர், அதன் உறுதித்தன்மையை கவனிக்கத் தவறிவிட்டார். இந்த பாலம் அமைப்பது தொடர்பாக சரியான திட்டமிடல் இல்லாமல்,  தரமற்ற முறையில் அவசரம் அவரசமாக அமைக்கப் பட்டு திறக்கப்பட்டதால், சாதாரண கடல் அலைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல் நொறுங்கி போயுள்ளது. இதன்முலம்,   மக்கள் பணம் ரூ.1.14 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மரப்பாதையை திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.