சென்னை: மாண்டஸ் புயல் சின்னம் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பாதை சேதம் அடைந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னையில் உள்ள கடற்கரைகளை அனைவருக்கும் ஏற்ற வகையில் மாற்றும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் மணல் பரப்பில் சென்று கடலை ரசிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புப் பாதை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி மெரினா கடற்கரையில் நம்ம சென்னை செல்பி பாயின்ட் பின்புறம் மணல் பரப்பில் 380 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் இந்தப் பாதை அமைக்கப்பட்டது. கான்கிரீட் அல்லாத மரப்பலகையால் ரூ.1 கோடி செலவில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்தப் பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், கடந்த நவம்பர் 27-ம் தேதி இந்தப் பாதை பயன்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில், மாண்டஸ் புயல் சின்னம் காரணமாக மெரினா கடற்கரையில் கடல் சீற்றம் அதிகரித்ததால் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பாதை சேதம் அடைந்துள்ளது. குறிப்பாக, கடலுக்கு அருகில் உள்ள பாதை பலத்த சேதம் அடைந்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தீபக்நாதன், “சென்னை மெரினாவில் கட்டப்பட்ட மாற்றுத்திறனாளி நடைபாதை சேதம் என்ற செய்தி உள்ளபடியே பாதிக்கிறது. வார்த்தைகள் இல்லை! முதல்வர் ஐயா இதை இன்னும் வலுவாக சரி செய்து தாருங்கள்! பிளீஸ் பிளீஸ்!” என்று தெரிவித்துள்ளார்.
அறப்போர் இயக்கத்தை சேர்ந்த ஜெயராமன் வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்னும் புயலே வரலை. அதுக்குள்ள மாற்றுத்திறனாளிகள் பாதை காலியாகிவிட்டது. அவ்வளவு சூப்பர் டிசைன். அவ்வளவு சூப்பர் டெண்டர் வேலை. இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் (பொது) ராஜேந்திரனிடம் பேசினோம். அவர் கூறுகையில், “சென்னை மெரினா கடற்கரை 260 மீட்டர் நீளமான கடற்கரையாகும். ஆமைகள் கடல் பரப்பிற்கு வந்து முட்டை போட்டுவிட்டு மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும். இதன் காரணமாக சிமென்ட், கான்கீரிட் போன்ற நிரந்தர கட்டுமானங்களை எழுப்ப முடியாது. சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை கொண்டுதான் கட்டுமானங்களை அமைக்க வேண்டும். இதன்படி அனுமதி பெற்றுதான் இந்த கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
எவ்வாறு சேதம் அடைந்து என்று ராஜேந்திரன் விளக்கினார். இந்த விளக்கத்தில் “நாங்கள் இதை அமைக்கும்போது 20 மீட்டருக்கு தள்ளிதான் கடல் இருந்தது. தற்போது புயல் காரணமாக தண்ணீர் இந்தக் கட்டுமானத்திற்கு கீழ் உள்ள மண்ணை கரைத்துவிட்டது. இதில் கடல் பரப்பிற்கு அருகில் உள்ள வியூ பாயின்ட்தான் சேதம் அடைந்துள்ளது, மரப்பலகைகள் அனைத்தும் நல்ல நிலையில்தான் உள்ளன. ஆணிகள் பெயர்ந்துவிட்ட காரணத்தால் கட்டுமானம் சேதம் அடைந்துள்ளது. இயற்கை சீற்றங்களின்போது பெரிய கட்டுமானங்களே சேதம் அடைந்துள்ளது. இது வெறும் மரம்தான்” என்று விளக்கம் அளித்தார்.
இதை சீரமைக்க எந்த மாதிரியான நடவடிக்கை என்ற கேள்வியை அவரிடம் முன்வைத்தோம். இதற்கு பதில் அளித்த ராஜேந்திரன், “இந்தப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரரை வைத்து இந்தக் கட்டுமானம் மீண்டும் சீரமைக்கப்படும். மேலும், பராமரிக்க தனி டெண்டர் கோரப்படும். அவர்கள் முழுமையாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்கள். தேவைப்பட்டால் 10 மீட்டர் பின்னே தள்ளி அந்தப் பகுதியை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
சீரமைத்த பின்பும் மீண்டும் தேசம் அடையுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “ரூ.1.14 கோடிக்கு இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கான்கீரிட் அமைப்பு போட்டால் ஆமைகள் மணல் பரப்பிற்கு வந்து செல்வதில் பாதிப்பு ஏற்படுத்தும். ஆமைகளில் வயிற்றுப் பகுதி கிழியலாம். எனவே, மீண்டும் இயற்கை சீற்றம் ஏற்பட்டாலும் அந்தக் கட்டுமானம் சேதம் அடையும். ஆனால், பலகைகள் சேதம் அடையாது. ஆணிகள் அடித்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்துவிடலாம்” என்றார்.