வாரணாசி: இந்தியாவையும் பாகிஸ்தானையும் உலகம் ஒன்றுபோல் கருதிய காலம் ஒன்று இருந்தது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்து தமிழ் சங்க கண்காட்சியை அமைச்சர் ஜெய்சங்கர் பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர், “நாம் தற்போது நமது பிராந்தியத்தில் கூடுதல் அதிகாரத்தைப் பெற்றுள்ளோம். இந்தியாவையும் பாகிஸ்தானையும் உலகம் ஒன்றுபோல் கருதிய காலம் ஒன்று இருந்தது. தற்போது யாரும் அப்படிப் பார்ப்பது இல்லை. ஏன் பாகிஸ்தான்கூட அப்படி பார்ப்பதில்லை. நமது பிராந்தியத்தின் மிகப் பெரிய சக்தி நாம். இதை தெளிவாக உணர்த்திவிட்டோம்.
பல்வேறு இந்திய நிறுவனங்கள் இன்று உலகில் செல்வாக்கு மிக்கவையாக உள்ளன. இந்தியாவின் சிந்தனைகள் உலகின் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளன. இந்தியா முன்னெடுக்கும் பிரச்சாரங்களுக்கு உலகம் மதிப்பளிக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் 3.2 கோடி முதல் 3.4 கோடி வரை இந்தியர்கள் வசிக்கிறார்கள். ஒன்று அவர்கள் இந்தியர்களாக இருக்கிறார்கள். அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவின் வெற்றி என்பது வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பையும் உள்ளடக்கியது. உலகம் இதை உணர்ந்திருக்கிறது.
வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. சர்வதேச விவகாரங்களில் முக்கிய பங்களிப்பை வழங்கக் கூடிய நாடாக நாம் முன்னேறி இருக்கிறோம்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் 10-15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா இரண்டாம் நிலையில்தான் இருந்தது. தற்போது இந்தியர்கள் புதுமைகளைப் படைப்பது அதிகரித்துள்ளது. நம்மிடம் உள்ள திறமையை, திறனை உலகம் தற்போது பார்க்கிறது. இதன் காரணமாக அவர்களது தொழிலில் இந்தியர்களை இணைத்துக்கொள்ள முயல்கிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.