ஏற்காடு: சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டில் வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக மழை நீடிக்கிறது. இதன் காரணமாக ஏற்காட்டில் கடும் குளிரும், கடும் பனிமூட்டமும் காணப்படுகிறது. மழையால் ஏற்காட்டில் நேற்றுமுன்தினம் இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அங்குள்ள 50க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் மட்டுமன்றி, நகரியத்திலும் மின்தடை தொடர்ந்து நீடித்தது. இதனால் இரவு நேரத்தில் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அவதி அடைந்தனர். மேலும் சாலை தெரியாத அளவிற்கு கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் அங்குள்ள வாகனஓட்டிகள், சுற்றுலா வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றனர்.
பனிமூட்டம் காரணமாக ஏற்காடு படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. மான்பூங்கா, அண்ணா பூங்கா சுற்றுலா பயணிகள் வருகை இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் சேர்வராயன் கோயில், பக்கோடா பாய்ண்ட், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அறவே இல்லாமல் இருந்தது. சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் சாலையோர வியாபாரிகளுக்கு வியாபாரம் இல்லாமல் போனது. ரெஸ்டாரண்ட், ஓட்டல், தங்கும்விடுதிகள் வெறிச்சோடியது.