கோவை சத்யன், செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க
“நாங்கள் நீண்ட நாள்களாகச் சொல்லிவருவதை முதல்வர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார். தேர்தலுக்கு முன்பாக, `எனது குடும்பத்திலிருந்து யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள்’ என்று ஸ்டாலின் சொல்லியிருந்தார். ஆனால், உதயநிதி அரசியலுக்கு வந்தார். வந்ததுமே எம்.எல்.ஏ-வும் ஆனார். தி.மு.க-வில் நீண்டகாலமாக மன்னர் ஆட்சிதான் நடைபெற்றுவருகிறது. கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின். ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி. அவருக்குப் பிறகு அவரின் மகன் என்று மக்களாட்சிக்கு மாறாக மன்னராட்சி முறையை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல், தி.மு.க-வில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறுநில மன்னர்கள், தனி அரசர்கள் அரசாட்சி செய்துகொண்டிருக் கிறார்கள். அமைச்சர்களின் மகன்கள் எம்.எல்.ஏ-வாகவும், வாரியங்களின் தலைவர்களாகவும் இருக்கிறார்கள். கடைக்கோடியில் இருக்கும் ஒருவர் மேலே வர வேண்டும் அதுதானே சமூகநீதி… ஆனால், இவர்களின் குடும்பங்களில் இருப்பவர்கள் மட்டுமே மேலே சென்றுகொண்டிருக்கிறார்கள். கட்சிக்காக 40, 50 வருடங்களாகக் கடுமையாக உழைத்த தி.மு.க மூத்த உறுப்பினர்கள், உதயநிதிக்கு போஸ்டர் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். சுப்புலட்சுமி ஜெகதீசன் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, அதே இடத்தில் தனது தங்கையை அமரவைக்கிறார் ஸ்டாலின். சமத்துவம், சமூகநீதி என்று பேசுபவர்கள் தங்களின் வாரிசுகளுக்காக அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள்.’’

இராஜீவ் காந்தி, மாணவரணித் தலைவர், தி.மு.க
“உண்மைதான். இதற்கான பதிலை, கடந்த 2020-ம் ஆண்டு அமித் ஷா தமிழ்நாட்டுக்கு வருகை தந்து, வாரிசு அரசியல் குறித்து விமர்சித்தபோதே, தளபதி ஸ்டாலின் பதிலாகச் சொல்லிவிட்டார். தி.மு.க என்ற மாபெரும் இயக்கத்தைச் சேர்ந்த நாங்கள் பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளுக்கு வாரிசு. அண்ணாவின் மாநில உரிமைக் கொள்கைகளுக்கு வாரிசு. கலைஞரின் சமூகநீதிக் கோட்பாடு களுக்கு வாரிசு. தளபதி ஸ்டாலின் இந்தக் கொள்கைப் பிடிப்புகளோடுதான் மக்கள் பணியில் ஈடுபட்டார். அவர்மீது நம்பிக்கைவைத்த மக்கள் ஆட்சிப் பொறுப்பைத் தந்திருக்கிறார்கள். பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் நின்று இன்று தமிழ்நாட்டைச் சிறப்பான முறையில் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார். உதயநிதி தேர்தலில் போட்டியிடும் போதும், ‘கட்சி என்னை வேட்பாளராக அறிவித்திருக்கிறது. கலைஞரின் பேரன் என்பதற்காக மட்டும் என்னைத் தேர்ந்தெடுக்க வேண்டாம். உங்களுக்காக உழைப்பேன் என்ற நம்பிக்கையுடன் வாக்களியுங்கள். இல்லையென்றால் தோற்கடியுங்கள்’ என்று பொதுவெளியில் சொல்லித்தான் வாக்கு கேட்டிருந்தார். அவர்மீது மக்கள் நம்பிக்கைவைத்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறவைத்தனர். தி.மு.க-வின் கொள்கை வாரிசுகளாக உண்மையாக உழைத்தால், மக்கள் பணி செய்தால் பதவியும் பொறுப்பும் அவர்களைத் தேடி வரும். மற்றபடி, அரசியலில் இருப்பவர்கள் குடும்பத்திலிருந்து, அடுத்த தலைமுறையினர் அரசியலுக்கு வரக் கூடாது என்பது நவீன மனுதர்மம்.’’