விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மஞ்சக்குப்பம் இசிஆர் சாலையில் நேற்று இரவு மாண்டஸ் புயல் காரணமாக சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்தை இன்று காலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டார். பின்னர் பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பால் இடிந்து விழுந்த வீடுகளை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் 2500க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது.
மாண்டஸ் புயல் விழுப்புரம் மாவட்டத்தில் பெரியஅளவில் பாதிப்பு ஏற்படுத்தவில்லை. உயிர் சேதம் ஏற்படவில்லை. விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதா என கண்டறிய ஆய்வு செய்து வருகிறோம். பிள்ளைச்சாவடியில் வீடுகளை இழந்தவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு பட்டா வழங்கப்படும். பின்னர் சின்னமுதலியார்சாவடி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.