புதுச்சேரி: புதுச்சேரியில் மாண்டஸ் புயல் காரணமாக பலத்தக் காற்றுடன் பரவலாக மழை பெய்த நிலையில், இரண்டு நாட்களில் பல்வேறு இடங்களில் 22 மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. 2 இடங்களில் மின் கம்பங்களும் சேதமடைந்தன. சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த மாண்டஸ் புயல் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதையொட்டி புதுச்சேரி முழுவதும் வெள்ளிக்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்தது. கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மிகுந்த குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
நள்ளிரவு புயல் கரையை கடந்த சமயத்தில் மழையுடன் காற்றின் வேகமும் அதிகரித்திருந்தது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. பல பகுதிகளில் மின் விநியோகமும் பாதிக்கப்பட்டது. ஒருசில பகுதிகளை தவிர்த்து பெரும்பாலான இடங்களில் சனிக்கிழமை காலை மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது.
பலத்த காற்று காரணமாக, புதுச்சேரி கடற்கரை சாலை, நீடராஜப்பர் வீதி, முத்தியால்பேட்டை, கதிர்காமம், கோரிமேடு, ரெட்டியார்பாளையம், மங்கலம், வில்லியனூர், கன்னியக்கோயில், சுத்துக்கேணி, திருபுவனை, சன்னியாசிக்குப்பம், காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் மரங்கள் சாய்ந்தன. பல இடங்களில் மரக்கிளைகளும் முறிந்து விழுந்தன. ஒரு சில இடங்களில் சிறிய தீவிபத்தும் ஏற்பட்டது.
கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் பகுதியில் பழமையான புளியமரம் வேரோடு சாந்து செல்வராணி, லட்சுமணன் ஆகியோரசு கூரைவீடுகளின் மீது விழுந்தது. இதில் வீடு சேதமடைந்த நிலையில் வீட்டில் இருந்தவர்கள் காயம் ஏதும் இன்றி தப்பினர். தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு, பொதுப்பணி மற்றும் உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் தேசிய பேரிடம் மீட்புக் படையினர் உடனே சம்பவ இடத்துக்கு சென்று இயந்திரங்கள் மூலம் விழுந்த மரங்கள் மற்றும் மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
வில்லியனூரில் 2 மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் அப்பகுதியில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. அதனை சீரமைக்கும் பணியில் மின்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலா தலங்கள் இன்று இரண்டாவது நாளாக மூடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். புயலையொட்டி புதுச்சேரியில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதுகுறித்து வருவாய்த் துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மாண்டஸ் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களில் புதுச்சேரி, காரைக்காலில் 22 இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. அவற்றை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். 2 மின் கம்பங்களும் சேதமடைந்துள்ளன. மேலும் நேற்று மாலை முதல் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 30 அழைப்புகள் வந்தன. இதில் பெரும்பாலான அழைப்புகள் மின் தடை தொடர்பான புகார்கள் ஆகும். இந்த மாண்டஸ் புயலையொட்டி புதுச்சேரியில் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்களோ, பாதிப்புகளோ ஏற்படவில்லை.’’ என்று தெரிவித்தனர்.
முதல்வரிடம் பாதிப்பை கேட்டறிந்த ஆளுநர்: தெலங்கானாவில் உள்ள ஆளுநர் தமிழிசை சனிக்கிழமை காலை முதல்வர் ரங்கசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாண்டஸ் புயால் புதுச்சேரியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறிததும் கேட்டறிந்தார். அப்போது, மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக முதல்வர் தெரிவித்தார். மாண்டஸ் புயலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாத நிலையில் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். கடலில் சீற்றம் தனிந்த நிலையில் ஒருசில மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.