சாலையோர வியாபாரிகள் பயனடைய ஏதுவாக, சாலையோர வியாபாரிகளுக்கான பிரதமரின் தற்சார்பு நிதி (பிரதமரின் ஸ்வா நிதி) திட்டம் அடுத்தாண்டு டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, மக்களவையில் மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள சாலையோர வியாபாரிகளின் நலன் கருதி, அவர்களின் வணிக முன்னேற்றத்துக்கு உதவும் வகையில் மத்திய அரசு சார்பில், சாலையோர வியாபாரிகளுக்கான பிரதமரின் தற்சார்பு நிதி (பிரதமரின் ஸ்வாநிதி) என்ற கடன் திட்டம் செயல்படுத்தப்பட்ட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி சாலையோர வியாபாரிகளுக்கு பிணை இல்லாத குறைந்த வட்டியிலான கடன், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரித்தல் மற்றும் சாலையோர வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் முழுமையான சமூக-பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.

ஸ்வா நிதி திட்டத்தில், சாலையோர வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் கடன்கள் அளிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் 5,000 கோடி ரூபாயில் தொடங்கப்பட்ட இத்திட்டம், தற்போது 8,100 கோடி ரூபாய் கடன் தொகையாக அதிகரிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருந்தது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடையவிருந்த இந்த திட்டத்தை மத்திய அரசு 2024ம் ஆண்டு டிசம்பர் வரை நீட்டித்துள்ளது.
இது தொடர்பாக, மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்புத்துறை இணையமைச்சர் கௌசல் கிஷோர், வியாழக்கிழமை மக்களவையில் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், “சாலையோர வியாபாரிகளுக்கான தற்சார்பு நிதி திட்டம், அடுத்தாண்டு 2024-ஆம் ஆண்டு டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், 2024 டிசம்பர் மாதம் வரை, 42 லட்சம் பேருக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

நடப்பாண்டு நவம்பர் 30-ம் தேதி வரை, 31.73 லட்சம் சாலையோர வியாபாரிகள், முதலாவது கடன் தொகையைப் பெற்றுள்ளதாகவும், இரண்டாவது முறை கடன்தொகையை 5.81 லட்சம் பேர் பெற்றுள்ளனர். இந்த இரு கடன்களை முறையாக திருப்பிச் செலுத்தியவர்களில் 6.926 பேர் மூன்றாவது கடன் தொகையான ரூ.50 ஆயிரத்தை பெற்றுள்ளதாக, அமைச்சர் கெளசல் கிஷோர் தெரிவித்தார்.