புயல் காற்றில் சரிந்த ராட்சத பேனர்; ஆபத்தான முறையில் பணியில் ஈடுபட்ட JCB ஊழியர்!

மாண்டஸ் புயல் காரணமாக கன மழையுடன் பலத்த காற்று வீசக்கூடும் என்பதினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள வணிக வளாகங்களில் உள்ள ராட்சத பேனர்களை அகற்றும் பணியினை கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாநகராட்சி நிர்வாகமானது மேற்கொண்டது. இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரத்தில் நேற்று நள்ளிரவில் பெய்த கன மழையின் போது பலத்த காற்று வீசியதில்  காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் சாலையில் இயங்கி வரும் பிரபல தனியார் கடைக் கடையின் ராட்சத பேனரின் இரும்பு அடி பாகம் முறிந்து ராட்சத பேனரானது ஒரு பக்கமாக சரிந்தது. இந்நிலையில் இன்று வழக்கம் போல் நகைக் கடை ஊழியர்கள் கடையை திறக்க வந்த போது ராட்சத பேனர் ஒரு பக்கம் சரிந்து ஆபத்தான நிலையில் இருந்ததைக் கண்டுள்ளனர்.

தற்போது ராட்சத ஜேசிபி பழுத் தூக்கும் இயந்திரம் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் பேனரை நிலை நிறுத்தி அகற்றும் பணிகள்  நடைபெற்று வருகிறது மேலும் இப்பணியின் போது ஊழியர் ஒருவர் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களின்றியும், ஜேசிபி பழுத்தூக்கும் இயந்திரத்தில் ஆபத்தான முறையில்  பணியாற்றியது இப்பணியினை வேடிக்கை பார்த்த பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆபத்தான முறையில் ஊழியர் பணியில் ஈடுபட்டப்போது ஏதேனும் அசாம்பாவிதங்கள் ஏற்பட்டிருந்தால் என்னவாகும் என்ற மன நிலையே காணப்பட்டது. மேலும் நேற்று நள்ளிரவு இந்த ராட்சத பேனர் ஒரு பக்கமாக சரிந்து முற்றிலுமாக கீழே விழாதாததால் அதிர்ஷ்டவசமாக  உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் வணிக வளாகங்களில் ராட்சத பேனர்களை அகற்றிய நிலையில் பிரபல நகைக் கடையின் ராட்சத பேனர் மட்டும் அகற்றப்பாடதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. முறையாக அகற்றிட மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியும், நகைக் கடை நிர்வாகம் இந்த பேனரை அகற்றாமல் அலட்சியமாக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

வங்கக்கடலில் கடந்த 5ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்தத் தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நேற்று முன் தினம் புயலாக வலுவடைந்தது. இதற்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டது. 2022ஆம் ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழையின் முதல் புயல் இது. புயலாக வலுவடைந்த மாண்டஸ் அதற்கடுத்து தீவிர புயலாக மாறி வங்கக்கடலிலேயே நிலை கொண்டிருந்தது. இதன் காரணமாக வட தமிழ்நாடு கடலோர மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. ஆங்காங்கே பலத்த காற்றும் வீசியது. சென்னையைப் பொறுத்தவரை மழை கொட்டி தீர்த்தது. அதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்டும் விடுக்கப்பட்டிருந்தது. புயல் காரணமாக தமிழ்நாட்டில் நேற்று 26 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.