பொங்கல் பரிசு இது தான்; வெளியானது சூப்பர் அறிவிப்பு!

விசைத்தறி வேட்டி சேலை உற்பத்தி மற்றும் கொள்முதல் முன்னேற்றம் குறித்து கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் திருச்செங்கோடு சரக பகுதிகளுக்கான ஆய்வுக் கூட்டம் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில், இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி பேசியதாவது:

கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் நலத்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு திட்டத்தின் கீழ் தற்போது விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட வேட்டி சேலைகள் மற்றும் கொள்முதல் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

கொள்முதல் செய்யப்பட்டு கிடங்கில் உள்ள வேட்டி சேலைகளை வருவாய் துறையின் மாவட்ட வாரியான தேவை அடிப்படையில் தாலுகா அலுவலங்களுக்கு அனுப்புவது குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.

வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கு தேவையான 177 லட்சம் வேட்டிகள் மற்றும் 177 லட்சம் சேலைகளில் இதுவரை 50 சதவீத உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த உற்பத்தியினை அடுத்த ஆண்டு ஜனவரி 10க்குள் நிறைவு செய்வதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளும், போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு முதல் இதுவரை வழங்கப்பட்ட வேட்டி, சேலைகளில் மாறுதல் செய்யப்பட்டு , சேலைகளில் 15 புதிய வண்ணங்களிலும், வேட்டியில் கரை 1 அங்குலத்தில் உற்பத்தி செய்யப்பட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் ஒரு லட்சம் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் தொடர்ந்து 6 மாத காலத்திற்கு வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். மேலும் இந்த திட்டத்தின் மூலம் உபதொழிலில் 50,000 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

இந்த விழாவில் திருப்பூர் சரகத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு முத்ரா கடன் திட்டத்தின் கீழ் ரூ .5.50 லட்சம் மதிப்பிற்கு கடன் உதவி வழங்கப்பட்டது.

மேலும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பணி புரிந்து 60 வயது பூர்த்தி அடைந்த கைத்தறி நெசவாளர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையை அமைச்சர்கள் காந்தி, கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் அரசு முதன்மைச் செயலர் ( கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதர்த் துறை) தர்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறி துறை ஆணையர் பொ.ராஜேஷ், துணிநூல் துறை ஆணையர் மு.வள்ளலார், மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.வினீத், மேயர் ந.தினேஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.